இருட்டு – விமர்சனம்

நடிகர் சுந்தர் சி
நடிகை சாக்‌ஷி செளத்ரி
இயக்குனர் வி.இசட்.துரை
இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஓளிப்பதிவு கிருஷ்ணசாமி

பனி சூழ்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஊரில் மர்மமான முறையில் 6 பேர் இறக்கிறார்கள். இந்த கேசை விசாரிக்கும் போலீசுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனால், இந்த கேசை விசாரிக்க சுந்தர்.சி தேர்வு செய்யப்படுகிறார்.

தனது குடும்பத்துடன் அந்த ஊருக்கு வருகிறார் சுந்தர்.சி. அங்கு வந்த பிறகு அவர்கள் தங்கும் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவரது மனைவி அறிகிறார். சில நாட்களில் சுந்தர்.சி.க்கும் அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சுந்தர்.சி. அந்த வழக்கை எப்படி விசாரித்தார்? அந்த 6 பேர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? விசாரணை செய்த போலீஸ் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். சாக்‌ஷி சவுத்ரிக்கு அதிகம் வாய்ப்பில்லை. கவர்ச்சிப் பதுமையாக வந்து செல்கிறார். சாய் தன்ஷிகா பார்வையால் மிரட்டியிருக்கிறார். விமலா ராமன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விடிவி கணேஷ் காமெடியில் கலகலப்பு கூட்டுகிறார். யோகி பாபு ஒரு காட்சியில் மட்டும் வந்து கவனம் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முகவரி, தொட்டிஜெயா, 6 கேண்டில்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, இம்முறை ஹாரர் கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான பேய் படங்களை தாண்டி வித்தியாசமாக உருவாக்கி பார்ப்பவர்களை பயமுறுத்தி சிறப்பாக இயக்கியுள்ளார். மீன், கறையான், பாம்பு, நாய் என ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் வரை திரைக்கதைக்குள் புகுத்தியிருப்பது சிறப்பு.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ஒரே பாடல் அவ்வளவு சீக்கிரம் முடிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். இவருடன் இணைந்து கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் அதிக பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இருட்டு’ சிறப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!