இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

நடிகர் தினேஷ்
நடிகை ஆனந்தி
இயக்குனர் அதியன் ஆதிரை
இசை டென்மா
ஓளிப்பதிவு கிஷோர்

மகாபலிபுரம் பீச்சில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைய, போலீசார் இதை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைக்கிறார்கள். அங்கிருந்து திருடப்பட்டு சென்னையில் நாயகன் தினேஷ் வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு வருகிறது.

குண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். அதை பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேஷ், தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிய வருகிறது.

இறுதியில் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார்? போலீசிடம் குண்டு கிடைத்ததா? சமூக நல மாணவர்களுக்கு கிடைத்ததா? குண்டு வெடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தினேஷ், இந்த படத்தையும் சரியாக தேர்வு செய்திருக்கிறார். இரும்பு கடையில் வேலை பார்க்கும் லாரி டிரைவராக மனதில் நிற்கிறார் தினேஷ். இரும்பு கடையில் வேலை பார்ப்பவர்களின் வலிகளை சொல்லும் போதும், தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தின் போதும், காதலிக்காக ஏங்கும் போதும், நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக குண்டு என்று தெரிந்தவுடன் அதை என்ன செய்வது என்று பதறும் போது கைத்தட்டல் பெறுகிறார்.

கிராமத்து பெண்ணாக கவர்ந்திருக்கிறார் ஆனந்தி. காதலனுக்காக வீட்டை பகைத்துக் கொண்டு, கட்டினால் அவரைத்தான் கட்டுவேன் என்று வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் மாஸ் காண்பித்திருக்கிறார். பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார் முனிஷ்காந்த். இவரின் வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம். நிருபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் ரித்விகா.

இரும்பு கடை முதலாளியாக வரும் மாரிமுத்து, தரகர் ஜான் விஜய், தினேஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், திருடனாக ஜானி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலீசாக நடித்திருக்கும் லிங்கேஷ் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ஒரு குண்டை வைத்து, காதல், சென்டிமெண்ட், ஜாதி, அரசியல், காமெடி ஆகியவற்றை தடவி பிரம்மாண்டமாக வெடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். குண்டுகள் பற்றி சொன்ன விதம் அருமை.

டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணியில் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் பின்னணி இசையின் மூலம் பார்ப்பவர்களை பயப்பட வைக்கிறது. ஒளிப்பதிவில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் கிஷோர்.

மொத்தத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ சிறந்த படைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!