அழியாத கோலங்கள் 2 – விமர்சனம்

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகை ரேவதி
இயக்குனர் எம்.ஆர்.பாரதி
இசை அரவிந்த் சித்தார்த்தா
ஓளிப்பதிவு காசி விஸ்வநாதன்

பிரகாஷ்ராஜ் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் பல்வேறு வி‌ஷயங்களை பேசிக்கொண்டு இரவை கழிக்கிறார்கள்.

அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார். சமூகம், சட்டம், குடும்பம் அனைத்தும் அர்ச்சனாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அவரை சந்திக்க பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதி வருகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

குறைந்த செலவில் குறைவான கதாபாத்திரங்களையும் லொகே‌ஷன்களையும் கொண்டு அழகான மரபுக்கவிதையை எம்.ஆர்.பாரதி கொடுத்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி மூவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் ஒவ்வொரு அசைவிலும் அவர்களது அனுபவமும் பக்குவமும் தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் நாசரும் தனது பங்குக்கு சிறப்பாக நடித்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகனே இசை தான். கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் தேவைப்படும் இடங்களில் மெலிதாக இசைத்து கதையுடன் ஒன்ற வைக்கிறார் அரவிந்த் சித்தார்த். ’இரு விழியில் ஈரமா இதயம் ஒரு பாரமா’ பாடலில் சித்ராவின் குரலில் உருகி போகிறோம். பல காட்சிகளில் மவுனமே உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துகிறது. சிறப்பான பங்களிப்பு.

ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவும் அழகான கவிதை. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக எடுத்து செல்கிறது. எளிமையான கதை தான். அதை மென்மையாக சொல்லிய விதத்தில் எம்.ஆர்.பாரதி கவனிக்க வைக்கிறார். இந்த தலைமுறையினருக்கு சில லாஜிக் கேள்விகள் எழலாம்.

ஆனால் முந்தைய தலைமுறை நடுத்தர வயதினரின் ஆண் பெண் நட்பு, கண்ணியமான முந்தைய தலைமுறை காதல் என தமிழ் சினிமாவில் அவ்வளவாக பேசப்படாத வி‌ஷயங்களை மிக கவனமாக கையாண்டுள்ளார். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

மொத்தத்தில் ‘அழியாத கோலங்கள் 2’ பொறுமையுடன் ரசிக்க வேண்டிய படைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!