மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் – விமர்சனம்

நடிகர் ஆரவ்
நடிகை காவ்யா தபர்
இயக்குனர் சரண்
இசை சைமன் கே.கிங்
ஓளிப்பதிவு கே.வி.குகன்

ஊரில் அடிதடி சண்டை என்று தாதாவாக இருக்கிறார் ஆரவ். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார்.

குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே கட்சியில் இருக்கும் ஹரிஷ் பெராடி ஆரவை கொலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார்.

இந்நிலையில், ஆரவ்வை போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது.

மிகவும் வீரனாக தாதாவாக இருக்கும் ஆரவ் உடம்பினுள் கோழையான ஒருவரின் ஆவி சென்றவுடன் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆரவ், இப்படத்தில் தாதா நடித்திருக்கிறார். உடற்கட்டு, ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற காட்சிகளில் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார். உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காவ்யா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என தன்னுடைய தனித்தன்மையை கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரியதாக எடுபடவில்லை. கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார் நிகிஷா பட்டேல்.

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நல்ல கதை ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. ஆவி வந்த பிறகுதான் படம் பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘மார்க்கெட் ராஜா’ சாதாரண ராஜா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!