கேடி என்கிற கருப்புதுரை – விமர்சனம்

நடிகர் மு ராமசாமி
நடிகை நடிகை யாரும் இல்லை
இயக்குனர் மதுமிதா
இசை கார்த்திகேயமூர்த்தி
ஓளிப்பதிவு மெய்யேந்திரன் கெம்புராஜ்

மு.ராமசாமி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர். அவர் கோமா நிலையில் வெகுகாலமாக இருப்பதால் அவரை கருணைக்கொலை செய்ய குடும்பம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டின் சில உள்கிராமங்களில் வயது முதிர்ந்த முதியோர்களை தலைக்கூத்தல் என்ற பெயரில் கருணைக்கொலை செய்யும் வழக்கம் உண்டு. அந்த வழக்கப்படி மு.ராமசாமியையும் கொல்ல குடும்பம் துணிகிறது.

இதை அறியும் மு.ராமசாமி அந்த வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்புகிறார். எங்கே செல்வது என்று தெரியாமல் அலையும் அவருக்கு ஒரு கோவிலில் அனாதை சிறுவனாக இருக்கும் நாக் விஷாலின் நட்பு கிடைக்கிறது. 80 வயதை தாண்டிய பெரியவருக்கும் 8 வயதே ஆன சிறுவனுக்கும் இடையே வயது வித்தியாசம் மறந்து ஆத்மார்த்தமான நட்பு உருவாகிறது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். இன்னொரு பக்கம் பெரியவரை கொல்ல அவரது குடும்பம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் பெரியவரும் சிறுவனும் பிரிய நேரிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்கும் பெரியவராக மு.ராமசாமி. நம் வீட்டு பெரியவர்களை கண்முன் நிறுத்துகிறார். கொல்ல துணியும் குடும்பத்தினரை பார்த்து அஞ்சுவது முதல், சிறுவன் விஷால் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பது வரை கருப்பு துரையாக வாழ்ந்து இருக்கிறார். பால்ய கால சினேகிதி வள்ளியை அவர் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது.

சிறுவன் நாக் விஷாலும் மு.ராமசாமியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறான். தொடக்கத்தில் மு.ராமசாமியிடம் வில்லத்தனம் காட்டுபவன் போக போக அவருடன் ஒன்றுவது நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

தலைக்கூத்தல் என்ற துன்பியல் சம்பவத்தை மையக்கருவாக கொண்டாலும் படத்தின் இறுதிக்காட்சி வரை சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ வைக்கிறார் இந்த கேடி. அன்பின் வலிமையையும் உறவுகளின் அவசியத்தையும் கருப்புதுரை மூலம் உணர்த்தியதற்காகவே மதுமிதாவுக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். வெறுமனே வசனங்கள் மூலம் கடக்க செய்யாமல் காட்சிகளின் வழியே உணர்வுகளை கூட்டி நெகிழ வைத்து அனுப்புகிறார்.

மனதை உறைய வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழும் ஒரு அருமையான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மதுமிதா. அவருக்கு பாராட்டுகள்.

தலைக்கூத்தல் என்ற நடைமுறையை கையில் எடுத்தாலும் படத்தின் எந்த காட்சியிலும் போரடிக்காமல் சுவாரசியமான திரைக்கதை, வசனத்தால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு வசனம், திரைக்கதையில் துணை நின்ற சபரிவாசன் சண்முகத்திற்கும் பாராட்டுகள்.

மெய்யேந்திரன் கெம்புராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் கிராமங்களுக்கே நம்மை கூட்டி செல்கிறது. கார்த்திகேயமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார்.

மொத்தத்தில் ‘கேடி என்கிற கருப்புதுரை’ கலக்கல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!