லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 90 வயதான அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர் கூறுகையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வருவார். வயது மூப்பின் காரணமாகவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார் என்றனர்.

லதா மங்கேஷ்கர் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தான் தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். 30 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, பத்ம பூ‌ஷன் விருது, பத்ம விபூ‌ஷன் விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது, தாதா சாகேப்பால்கே விருது, 4 முறைக்கு மேல் பிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!