நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை – இசையமைப்பாளர் தேவா

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் தேவா, நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை என்று கூறியிருக்கிறார்.

சுருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் பேசியதாவது:-

“முன்பெல்லாம் பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம். திறமை இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள். முந்தையை காலத்தில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். நான் ஆரம்பத்தில் தூர்தர்ஷன் அலுவலகத்தில் அங்கு வருபவர்களுக்கு நாற்காலி எடுத்து போடும் வேலை பார்த்தேன்.

40-வது வயதில்தான் சினிமாவுக்கு வந்தேன். என் முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஒரு பாடகர் புல்லட்டில் வருவார். அவர் எப்படி பாடினாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அவர் பணம் கொடுத்துத்தான் ரிக்கார்டிங்கே நடக்கிறது என்றார். புல்லட்டில் வந்தவர் பெரிய மளிகை கடை வைத்து இருந்தார். அவர் நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பாடினார். நானும் தயாரிப்பாளர் சொன்னதுபோல் மனசாட்சியை விற்று ரொம்ப நன்றாக இருக்கிறது என்று அவரை பாராட்டினேன்.

அந்த தயாரிப்பாளர் எனக்கு நிறைய பணம் தருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் எட்டணா கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் அந்த படத்துக்கு கதாநாயகன். ஆனால் படம் வெளிவரவில்லை. இப்போது முன்னுக்கு வர துடிப்பவர்களுக்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பது தெரிவதற்காக இதை சொல்கிறேன்.

ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த 13 படங்கள் திரைக்கு வரவில்லை. 14-வது படம்தான் ரிலீசானது’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!