உடல்நிலை குறித்து ரசிகர்களுடன் அமிதாப்பச்சன் உருக்கம்

இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் திரையுலகத்திற்கு அவர் வந்து நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அவர், நடித்த முதல் படம் ‘‘சாத் இந்துஸ்தானி’’. இந்த படம் கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி வெளியானது. 50 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தி சினிமாவில் அமிதாப் பச்சனின் ஆதிக்கம் இன்னும் தொடருகிறது.

அவரது 50 ஆண்டுகால திரையுலக சாதனையை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அவரது ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அவர் நேற்று தனது உடல்நலம் குறித்த உருக்கமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதில், டாக்டர்கள் தன்னை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எனது உடலில் பல துளைகள் போடப்பட்ட நிலையில் தற்போது சோனோகிராபியும் எடுக்கப்படுகிறது. சில ஊசிகளும் பக்கவாட்டில் குத்தப்பட்டுள்ளன. நரம்புகளில் ஊசிகள் குத்தப்பட்டு மருந்துகளும் ஏற்றப்படுகின்றன. வேலை பளுவை குறைத்து கொள்ளுமாறு சொர்க்கத்தில் இருந்து வந்த ஸ்டெதஸ்கோப் அணிந்த தூதர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!