மிக மிக அவசரம் – விமர்சனம்

நடிகர் ஹரீஷ்
நடிகை ஸ்ரீ பிரியங்கா
இயக்குனர் சுரேஷ் காமாட்சி
இசை இஷான் தேவ்
ஓளிப்பதிவு பாலபரணி

பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்தி விடுகிறார்.

நேரம் ஆக ஆக ஸ்ரீபிரியங்காவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. ஆனால் முத்துராமனின் பழிவாங்கலால் அவரால் சிறு ஓய்வு கூட எடுக்க முடியாத சூழல். சக போலீஸ்காரர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோராலும் எதுவும் செய்ய முடியாத சூழல். கடும் உடல் உபாதைக்கு ஆளாகும் ஸ்ரீ பிரியங்கா என்ன ஆகிறார் என்பதே கதை.

வேறு எந்த நாயகியும் ஏற்றுக்கொள்ள தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. முதல் பாதியில் சாதாரணமாக தொடங்குபவர் நேரம் செல்ல செல்ல தனது அவஸ்தைகளை ரசிகர்களிடம் தன் நடிப்பால் கடத்துகிறார். விருதுக்கு உரிய நடிப்பு. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஸ்ரீ பிரியங்காவின் துன்பத்தை எண்ணி நம் கண்கள் கலங்குகின்றன. தமிழ் பெண்ணான ஸ்ரீ பிரியங்கா ஒட்டுமொத்த பெண் போலீசுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.

ஸ்ரீ பிரியங்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வழக்கு எண் முத்துராமன். பார்வையாலேயே வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். அவரது சதி செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. சீரியசான படத்தை கலகலப்பாக நகர்த்துவது ஈ.ராம்தாஸ் தான். சக போலீஸ்காரராக தனது ஒருவரி பன்ச் வசனங்களால் கைதட்ட வைக்கிறார். இயல்பான நடிப்பு அனுபவத்தை காட்டுகிறது.

டிரைவராக வரும் வீகே.சுந்தர் தனது நடிப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். சரவண சக்தியும் சிரிக்க வைக்கிறார். சக போலீசுக்கே உதவ முடியாத நிலையை மூவருமே இயல்பாக பிரதிபலிக்கிறார்கள். ஸ்ரீ பிரியங்காவின் காதலராக ஹரிஷ் குமாரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். காதலிக்காக ஆம்புலன்சை எடுக்க முயற்சிக்கும்போது வேலை தடுக்கவே கடமைக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

சீமான் கம்பீரமான நடிப்பால் கவர்கிறார். அரவிந்தன் அகதிகளின் நிலையை விளக்கும்போது வலிக்கிறது. லிங்கா, வெற்றிகுமரன், குணசீலன், பேபி சனா ஜெகன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை அதன் பின்னணியுடன் சொல்லும் படங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெறும். அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண் காவலர்கள் தங்கள் பணியில் படும் அவதிகளையும் சந்திக்கும் பிரச்சினைகளையும் தனது முதல் படத்திலேயே அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி. இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு பாராட்டுகள்.

இஷானின் இசையும் பாலபரணியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. எளிதில் கடந்து செல்லும் பெண் போலீசாரின் வாழ்க்கைக்குள் நுழைந்துவந்த உணர்வை கதை வசனம் எழுதிய ஜெகனும் திரைக்கதை எழுதி இயக்கிய சுரேஷ் காமாட்சியும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

முக்கிய பாலங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் போலீஸ்காரர்களை பார்த்தால் நாம் இயல்பாக கடந்து செல்வோம். இனி அப்படி கடக்க முடியாது. இது ஒன்றே இந்த மிக மிக அவசரம் நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லும் உண்மை.

மொத்தத்தில் மிக மிக அவசரம் – மிக மிக அவசியமான ஒரு படைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!