இந்திய அணிக்குத் தேர்வாகாத தமிழக கிரிக்கெட் வீரர்: ஆர்ஜே பாலாஜி வருத்தம்!

தமிழகத்தைச் சேர்ந்த 29 வயது அபினவ் முகுந்த், இந்திய அணிக்காக 7 டெஸ்டுகளில் விளையாடி 2 அரை சதங்களை எடுத்துள்ளார். கடைசியாக 2017-ல் இலங்கைக்கு எதிராக விளையாடி 2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். எனினும் அதற்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு முகுந்துக்குக் கிடைக்கவில்லை.

இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணி இறுதிச்சுற்றில் கர்நாடக அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார் முகுந்த். கடந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி 560 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் முகுந்த்.

எனினும் இந்திய அணிக்கான தேர்வுக்குழு முகுந்தைச் சீந்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் தியோதர் கோப்பைக்கான மூன்று அணிகளிலும் முகுந்துக்கு இடம் கிடைக்கவில்லை.

முகுந்தின் இந்த நிலைமை கண்டு வருந்தாத தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களே இருக்கமுடியாது. நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தன்னுடைய வருத்தத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

ஐபிஎல்-லில் ஒவ்வொருமுறையும் யாராவது 50, 100 ரன்கள் அடித்தால் அந்த வீரர் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என விரும்புவோம். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மூன்று முறை தலா 500 ரன்கள் எடுத்த ஒரே வீரர் – அபினவ் முகுந்த் மட்டுமே. இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரர். இந்திய அணிக்குத் தேர்வாவதை விடுங்கள், தியோதர் கோப்பைப் போட்டிக்குக்கூட அவர் தேர்வாகவில்லை.

மேலும், இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸில் அவர் இலங்கைக்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவே இல்லை. ஆமாம், 81 ரன்கள் எடுத்த பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 29 வயதுதான். தொடர்ந்து விளையாடி போராடுங்கள் முகுந்த் என்று ஆர்ஜே பாலாஜி எழுதியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!