மதுரராஜா – விமர்சனம்

நடிகர் மம்மூட்டி
நடிகை அன்னா ராஜன்
இயக்குனர் வைஷாக்
இசை கோபி சுந்தர்
ஓளிப்பதிவு ஷாஜி குமார்

கேரளாவில் தனித்தீவு போல உள்ள ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் ஜெகபதி பாபு. அவரது ஆட்கள் அங்குள்ள பள்ளி அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு தொல்லை தருகிறார்கள். இதை விசாரிக்க பள்ளி நிர்வாகம், மம்முட்டியின் தந்தையான நெடுமுடி வேணுவை அனுப்பி வைக்கிறது. ஆனால் அவரை அந்த கும்பல் மிரட்டி பொய்யான அறிக்கை கொடுக்க வற்புறுத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் மம்முட்டியின் வளர்ப்பு தம்பியான ஜெய் அந்த ஊருக்கு வந்து அவர்களை தட்டிக்கேட்கிறார். அவர்மீது பொய்வழக்கு போட்டு ஜெயிலில் அடைக்கிறார்கள். இந்த சூழலில் மதுர ராஜாவான மம்முட்டி, தனது ஆட்களுடன் அந்தத் தீவுக்கு வந்து கோதாவில் இறங்குகிறார். இதையடுத்து மம்முட்டி ஜெய்யை மீட்டாரா? ஜெகபதி பாபுவின் பிடியிலிருந்த தீவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படமான ‘போக்கிரி ராஜா’வின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த ‘மதுர ராஜா’. இரண்டு படங்களுக்கும் பத்து ஆண்டு இடைவேளை இருந்தாலும் மம்முட்டி தோற்றத்தில் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தரும். தனி ஒரு ஆளாக சண்டைக்காட்சிகளில் அதிரவைக்கிறார் மம்முட்டி. வழக்கம் போல தப்பும் தவறுமாக அவர் பேசும் ஆங்கிலம் மொத்தப்படத்திற்கும் நகைச்சுவையுடன் நகர்த்துகிறது.

படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜெய். சண்டைக்காட்சி, சன்னி லியோனுடன் ஐட்டம் டான்ஸ் என அறிமுக படத்திலேயே அவருக்கான எந்த முக்கியத்துவமும் குறையாமல் சகலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வலம் வரும் ஜெகபதி பாபு இந்த படத்திலும் வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ ரேஷ்மா ராஜன் என ஒன்றுக்கு நான்கு கதாநாயகிகள் அழகு பதுமையாக வந்து கவர்கிறார்கள்.

ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார் நரேன். இசையமைப்பாளர் கோபிசுந்தர் தன் இசையால் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரே ஒரு தனித்தீவில் மொத்த படத்தையும் அழகியலோடு படமாக்கி முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.

இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் வைசாக் இடைவேளைக்கு பிறகு தேர்தல், போட்டி என படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்திருக்கிறார். முதல் பாகமான போக்கிரி ராஜா படத்துடன் ஒப்பிடும்போதும், மதுர ராஜா சற்று தொய்வையே ஏற்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ’மதுர ராஜா’ வேகம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!