லோக்கல் ஏரியா பையனின் காதல் காமெடி கலாட்டா – ஏ 1 விமர்சனம்

நடிகர் சந்தானம்
நடிகை தாரா அலிசா பெர்ரி
இயக்குனர் ஜான்சன் கே
இசை சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு கோபி ஜெகதீஷ்வரன்
நாயகி தாரா அலிசா ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினியை போல வீரமிக்க ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரிட்டேரான ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் தாரா, அங்கேயே சந்தானத்திற்கு முத்தம் கொடுத்து தனது காதலை சொல்லுகிறார்.

மறுநாள் சந்தானம் ஒரு லோக்கல் ஏரியா பையன் என்று தெரிந்ததும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார் தாரா. இந்நிலையில், சமூக சேவகரும், ஊரில் மிகவும் மரியாதையும் கொண்ட தாராவின் தந்தை, நெஞ்சுவலியால் மயங்கி விழுகிறார். அவரை சந்தானம் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதையறியும், தாராவிற்கு மீண்டும் சந்தானம் மீது காதல் ஏற்படுகிறது.

தாராவை திருமணம் செய்வதற்காக, சந்தானம் தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், தாய் மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரை அழைத்துக் கொண்டு தாரா வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு தாராவின் அப்பா, சந்தானம் மற்றும் குடும்பத்தினரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால், தாரா மீண்டும் சந்தானம் மீதான காதலை முறித்துக் கொள்கிறார். கடுப்பாகும் சந்தானம், தனது நண்பர்களிடம் தாரா அப்பாவை பற்றி கோபமாக பேச, அவர்கள் சந்தானத்திற்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தாரா அப்பாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள்.

இதன்பின் என்ன ஆனது? சந்தானம் நாயகியை எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.

நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஏ 1’ காமெடி கலாட்டா.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.