தமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்

நடிகர் நடிகர் இல்லை
நடிகை நடிகை யாரும் இல்லை
இயக்குனர் ஜோன் பேவ்ரோவ்
இசை ஹேன்ஸ் சிம்மெர்
ஓளிப்பதிவு காலேப் தேசனெல்

1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்’. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் முறையில் வெளியாகி உள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் ’தி லயன் கிங்’ திரைப்படம் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.

`அயர்ன் மேன்’, `தி ஜங்கிள் புக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோன் பேவ்ரோவ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் முறையில் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

இப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு அதிகம். நவீன தொழில்நுட்பத்தை இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆயிரக்கணக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்திருக்கிறார்கள் அத்தனை பேரின் உழைப்பும், திரையின் உச்ச அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.

இப்படத்திற்கு வசனம் தான் மிகப்பெரிய பலம். முக்கியமாக அதற்கு டப்பிங் பேசிய விதம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் வெர்ஷனில் இடம்பெறும் கேரக்டர்களுக்கு சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரவிசங்கர், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் டப்பிங் கொடுத்திருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தில் தனித்துவமான வில்லத்தனத்தால் மிரட்டிய அரவிந்த் சாமி, இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமான ஸ்காருக்கு குரல் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமானதாகவும் பல பரிணாமங்களை கொண்டதாகவும் உள்ள ஸ்கார் கதாபாத்திரத்திற்கு தனது குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே கூறலாம். படத்தின் ஹீரோவான சிம்பாவிற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார். காதல், நட்பு, சென்டிமெண்ட் என வெவ்வேறு உணர்வுகளை கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு டப்பிங் செய்து அசத்தி இருக்கிறார் சித்தார்த்.

நண்பர்களாக வரும் டிமுன் மற்றும் பும்பாவிற்கு சிங்கம் புலியும், ரோபோ சங்கரும் குரல் கொடுத்துள்ளனர். காமெடிக்கு பெயர்போன இவர்கள் இருவரும், இந்த இரு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ள விதம் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றனர். தூதுவனாக வரும் சாசு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள மனோபாலாவும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை, சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக சாசு பறவை பேசினால் இவர் குரலை தவிற வேறு எந்த குரலும் பொருந்தாது என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஹேன்ஸ் சிம்மெரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘தி லயன் கிங்’ விஷுவல் கிங்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.