விமலின் கிராமத்து அரசியல் – களவாணி 2 விமர்சனம்

நடிகர் விமல்
நடிகை ஓவியா
இயக்குனர் சற்குணம்
இசை ரொனால்டு ரீகன்
ஓளிப்பதிவு மசானி

9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் களவாணி. அந்த கதைக்களத்தில், இடம்பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு புதுமையான கதையுடன் களவாணி2 என்ற கலகலப்பான படத்தை கொடுத்து இருக்கிறார் சற்குணம். விமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞர். அவரது நண்பர் விக்னேஷ் காந்த். விமலை வெளிநாட்டுக்கு வேலைக்கு போக சொல்லி அப்பா இளவரசு கண்டிக்கிறார். ஆனால் அம்மா சரண்யாவோ விமலுக்கு ஆதரவு கொடுக்கிறார்.

இப்படியே சென்றுகொண்டு இருக்கும்போது ஊரில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் விமலின் மாமா துரை சுதாகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓவியாவின் அப்பாவும் முன்னாள் பிரசிடெண்டுமான வில்லன் ராஜ் போட்டியிடுகிறார். இவர்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தில் விமலும் போட்டியிடுகிறார்.

விமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.

தஞ்சை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது முதல், நகைச்சுவை, பாடல்கள் என எந்த வி‌ஷயத்திலும் களவாணி 2 களவாணிக்கு முன் சோடை போகவில்லை. கலகலப்பாக படத்தை நகர்த்தி கடைசி அரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள். விமலுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற வேடம்.

களவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.

இளவரசுவும் சரண்யாவும் தஞ்சாவூர் கிராமத்து தம்பதியை தங்கள் அனுபவ நடிப்பால் கொண்டு வந்து இருக்கிறார்கள். துரை சுதாகர் தனது கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்துகிறார். விமலை அவமானப்படுத்தும் இடத்தில் சிறப்பான நடிப்பு. வில்லன் ராஜுக்கும் இது முதல் படம் போல தெரியவில்லை. மசானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.

மொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.