தொழிலதிபராக ஆசைப்பட்டு மோசடியில் சிக்கும் இளைஞர் – ஓவியாவ விட்டா யாரு சீனி விமர்சனம்

நடிகர் சஞ்ஜெய்
நடிகை ஓவியா
இயக்குனர் ராஜதுரை
இசை ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு ஈ.கே.நாகராஜ்
மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.

ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.

மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி’ ஆசை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.