உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல்ல: ‘ஐரா’ விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா மற்றும் பவானி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கலையரசன் பவானியின் காதலனாக நடித்துள்ளார்.

யமுனா மீடியாவில் பணிபுரியும் துணிச்சலான பெண். இவருக்கு யூ ட்யூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் வித்தியாச வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

தனது பாட்டி, யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து பேய் இருப்பது போல வீடியோக்களை உருவாக்கி அதனை வெளியிட்டு செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

திடீரென இவரை சுற்றி திகிலான சம்பவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஒரு பட்டாம் பூச்சி இவரையே சுற்றி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க நயன்தாராவின் மற்றொரு வேடமான பவானி பிறக்கும் போதே தன்னுடைய அப்பாவை பறி கொடுத்து விடுகிறார். இதனால் அப்போதில் இருந்தே அவர் ராசியில்லாத பெண் என முத்திரை குத்தப்பட்டு பெற்ற தாய், அக்கா, அக்காவின் கணவர் ஆகியோரால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தினர், பள்ளியில் சக மாணவ மாணவிகள் என அனைவராலும் கேலி கிண்டலுக்கு மட்டுமே ஆளாகி வருகிறார். அப்போதெல்லாம் இவருக்கு ஆதரவாக இருப்பவர் கலையரசன் ( அமுதன் ) மட்டும் தான். கலையரசனின் இந்த அன்பு காதலாகவும் மாறுகிறது.

தன் மீது அன்பை காட்டும் ஒரே ஜீவன் கலையரசன் மட்டுமே என்பதால் பவானிக்கும் கலையரசன் மீது காதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் வீட்டுக்கு தெரிந்து கலையரசனின் அப்பா அவரை வெளியூருக்கு படிக்க அனுப்பி விடுகிறார்.

பவானி தன்னுடைய குடும்பரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுகிறார். அதன் பின் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் பவானி எதிர்பாராத விதமாக கலையரசனை மீண்டும் சந்திக்கிறார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர்,. திருமணத்தன்று சாலையை கடக்கும் போது பவானி லாரி மோதி விபத்துக்குள்ளாகிறார்.

அதன் பின்னர் பவானியின் ஆவி என்னவெல்லாம் செய்கிறது? யமுனாவை ஏன் கொல்ல முயல்கிறது? இந்த விபத்துக்கும் யமுனாவிற்கும் என்ன சம்மந்தம்? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களின் மூலம் பிரபலமான சர்ஜுன் திரில்லர் கலந்த திரைக்கதையுடன் ஒரு சமூக கருத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யமுனா, பவானி என இரண்டு வேடத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கலையரசனின் நடிப்பும் பிரமாதமாக அமைந்துள்ளது.

யோகி பாபு முதல் பாதியில் மட்டுமே வந்தாலும் நம்மை சிரிக்க வைத்து சென்று விடுகிறார். ஆனால் மற்ற படங்களின் அளவிற்கு காமெடி இல்லை.

தொழில் நுட்பம் :

இசை :

சுந்தரமூர்த்தி கே. எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திகில் படத்திற்கு இசை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி கொடுத்துள்ளார். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார். மேகதூதம் பாடல் மக்கள் மனதை கொள்ளையடிப்பது உறுதி.

ஒளிப்பதிவு :

சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் என்பவரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். திகிலான காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை பயம்புறுத்தும் வகையில் படம் பிடித்துள்ளார்.

எடிட்டிங் :

கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங்கும் கச்சிதமாக அமைந்துள்ளது. படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

மா, லட்சுமி ஆகிய குறும்படங்களின் மூலம் பெரிதும் பேசப்பட்ட சர்ஜுன் இந்த படத்தையும் மக்கள் பேசும் விதமாக எதார்த்தமான கதையுடன் இயக்கியுள்ளார். படத்தின் வேகத்தை மட்டும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. நயன்தாராவின் நடிப்பு
2. கலையரசன் நடிப்பு
3. படத்தின் இசை
4. ஒளிப்பதிவு
5. சமூக கருத்து

தம்ப்ஸ் டவுன் :

1. தமிழ் சினிமாவிற்கு பழகி போன சில லாஜிக்கல் தவறுகள்
2. வேகத்தை மட்டும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.