கட்சியில் இருப்பவரின் கனவு, ஆசை பலித்ததா? எல்கேஜி விமர்சனம்

நடிகர் ஆர்ஜே பாலாஜி
நடிகை ப்ரியா ஆனந்த்
இயக்குனர் கேஆர் பிரபு
இசை லியோன் ஜேம்ஸ்
ஓளிப்பதிவு விது ஐய்யனா
100100
ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே இருந்து வரும் தந்தையை போல் இல்லாமல், கவுன்சிலரில் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி என அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

இவருடைய மாமா மயில்சாமி துணையுடன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரின் கட்சித் தலைவரான முதலமைச்சர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருப்பவர் ராம்குமார். இவருக்கும் அதே கட்சியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷுக்கும் மோதல் இருந்து வருகிறது.

முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலமைச்சர் தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக நினைத்து சென்னைக்கு வருகிறார். அங்கு சமூக வலைத்தளத்தில் சிறந்து விளங்கும் நாயகி பிரியா ஆனந்தை சந்திக்கிறார்.

இவர் மூலம், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக என்னவெல்லாம் வழி இருக்கிறதோ, அதையெல்லாம் செய்து பிரபலமாகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில், முதலமைச்சர் இறக்க, ராம்குமார் ஆர்ஜே பாலாஜியை அழைத்து பேசி இடைத்தேர்தலில் நிற்க வைக்கிறார்.

இதற்கு ஜே.கே.ரித்திஷ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி, அதே தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இறுதியில், ஆர்ஜே பாலாஜி, ஜே.கே.ரித்திஷை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

நாயகி பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜிக்கு ஆலோசனையாளராகவும், அறிவுரையாளராகவும் நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி வில்லனாக வரும் ஜே.கே.ரித்திஷ், பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், மாமாவாக வரும் மயில்சாமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராம்குமார் நடிப்பில், சிவாஜியும், பிரபுவும் வந்து செல்கிறார்கள்.

ஆர்ஜே பாலாஜி மனதில் நினைத்ததை திறம்பட இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த அரசியல் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்…’ என்ற ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘எல்கேஜி’ ஜெயிச்சாச்சி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.