சிறுத்தை வேட்டை – சினிமா விமர்சனம்


ராம் சரண் சிறுவனாக இருக்கும் போது அவரது தந்தையை ரவுடி கும்பல் அவரது கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்து விடுகின்றனர். அதே நேரத்தில் ராம் சரணின் அம்மா தலையில் பலத்த காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ராம் சரணிடம் அவனது அம்மாவின் சிகிச்சைக்கு பணம் தருவதாக ஒருவர் கூறுகிறார்.

ராம் சரண் ஒரு கொலை குற்றத்தை ஏற்று சிறைக்கு சென்றால் அவரது அம்மா உயிரை காப்பாற்றுவதாக கூற கொலை குற்றத்தை ஏற்றுக் கொண்டு ராம் சரண் ஜெயிலுக்கு செல்கிறார். 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ராம் வெளியில் வந்த பின்னர் அவரது தாய் இறந்து விட்டதாக தகவல் கிடைக்க தனது மாமாவை பார்க்க தாய்லாந்து செல்கிறார்.


பின்னர் பாங்காக்கில் ஒரு டிராவல் ஏஜென்சியில் அவருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு பிரபல தொழிலதிபரான பிரகாஷ்ராஜின் மகளான நாயகி நேகா சர்மாவை பாதுகாக்கும் பொறுப்பு ராம் சரணுக்கு வருகிறது. நேகாவை பார்த்த உடனே ராம் சரணுக்கு அவள் மீது காதல் வந்துவிடுகிறது.

அவளுக்கு பாதுகாப்பாக செல்லும் போது நேகா தற்பெருமையாக நடிந்து கொள்வதும், பிடிவாதம் பிடிப்பதும் ராம் சரணுக்கு அவள் மீது ஒருவித எரிச்சலை உண்டாக்குகிறது. இந்நிலையில், ராம்சரணின் தந்தையை கொன்றவர்கள் தாய்லாந்தில் இருப்பதும் அவருக்கு தெரிய வர அவர்களை ராம் சரண் பழிவாங்கினாரா? அவர்கள் ராம் சரணின் தந்தையை ஏன் கொன்றார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? நேகா சர்மாவுக்கு ராம் சரண் மீது காதல் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.


ராம் சரணின் முதல் படம் என்றாலும் தனது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல், ரொமேன்ஸ், ஆக்‌ஷன் என ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார். அடங்காத பெண்ணாக நேகா நர்மா சிறப்பாகவே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.

பூரி ஜெகன்நாத்தின் மற்ற படங்கள் போல இந்த படத்தில் ஒரு வலுவான அடித்தளம் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. படத்தின் திரைக்கதையும் மெதுவாகவே செல்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குலைத்திருக்கிறது. மற்றபடி படம் ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும்படி இருக்கிறது.

மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவே இருக்கிறது. ஷியாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `சிறுத்தை வேட்டை’ வேகமில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!