மாரி 2 – சினிமா விமர்சனம்


மாரி முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மாரி இரண்டாம் பாகமும் வந்துள்ளது. அதே இயக்குனர் ஆனால் வேறு ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளருடன் தனுஷ் இந்த முறை களமிறங்கியுள்ளார். மாரி 2 படம் எப்படி? வாருங்கள் பாப்போம்.

கதைக்களம்
பிரபல ரவுடியான மாரியை (தனுஷ்) கொள்ள தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. 100முறை அதை முறியடித்துள்ளார் என்கிற சாதனையை கொண்டாடும் அளவுக்கு அது தொடர்கிறது. மாரி கேங்கில் கிருஷ்ணாவும் சேர்ந்து தான் வழிநடத்துகிறார். போதை பொருள் கடத்தல் மட்டும் கூடாது என்கிற விஷயத்தில் தனுஷ் உறுதியாக இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க வில்லன் டோவினோ தாமஸ் மாரியை கொல்லவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்பி வருகிறார்.


இன்னொரு பக்கம் கலெக்டராக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார், சென்னையில் இருக்கும் மொத்த கேங்ஸ்டர்களையும் ஒழித்துக்கட்டுவேன் என தனுஷை எச்சரிக்கிறார்.

லவ் நம்ம கேரக்டருக்கு செட் ஆகாது என சுற்றிவரும் மாரியை சுற்றி சுற்றி ஒரு தலையாக காதலிக்கிறார் அராத்து ஆனந்தி (சாய் பல்லவி).

கிருஷ்ணா போதை பொருளுக்கு அடிமையாகி மீண்டவர். அவரது தம்பி எதிர் கேங் டோவினோ தாமஸூடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து சாய் பல்லவியை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துகிறார். அந்த பழியை மாரி மீதே போட்டு தனுஷ்-கிருஷ்ணா இருவரையும் பிரிக்கிறார்.

எந்த சப்போர்ட்டும் இல்லாத மாரியை தற்போது கொல்ல கிளம்புகிறார் வில்லன். அதில் சாய் பல்லவி சிக்க, மாரி அவரை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிறார்.


அதன்பின் மாரி மற்றும் சாய் பல்லவிக்கு என்ன ஆனது? திரும்பிவந்து வில்லனை அழித்தாரா என்பது தான் மீதி படம்.

படத்தை பற்றிய அலசல்
தனுஷ் – மாரி முதல் பாகத்தை போலவே மொத்த படத்தையும் தோளில் தாங்கி நின்றுள்ளார். ஆனால் அவரையும் நடிப்பில் ஓவர்டேக் செய்துவிட்டார் சாய் பல்லவி. அழுதுகொண்டே தனுஷிடம் காதலை சொல்லும் சீனில் அவர் நடிப்பு நம் கண்களையும் ஈரமாக்கும். ரவுடி பேபி பாடலில் தனுஷின் நடனத்தை விட ஒரு படி அதிகமாகவே கவர்கிறார் சாய் பல்லவி.

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள இறக்குமதி. படம் முழுக்க நீளமாக வசனம் பேசிக்கொண்டே இருக்கிறார். தனுஷே கிளைமாக்ஸில் “உன்னை பார்த்தால் கூட பயமா இல்லை.. நீ பேசுற லெந்த்தான டயலாக் கேட்க தான் பயமா இருக்கு” என கூறும் அளவுக்கு அவரின் வசனங்கள் உள்ளன.

வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சில நிமிடங்கள் மட்டும் வரும் சிறிய ரோல் தான். தனுஷுக்கு ஜால்ரா ரோலில் ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத், பெரிதாக காமெடி ட்ராக் இல்லை என்றாலும், ரோலுக்கு தகுந்தபடி நடித்துள்ளனர்.

யுவனின் பின்னணி இசை சில இடங்களில் அதிகம் கவர்கிறது. மாரி 1ல் அனிருத் இசையை அவர் ஓவர்டேக் செய்தாரா என்றால் அது கேள்விக்குறிதான்.


மேலும் படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல லாஜிக் மீறல்கள். கிளைமாக்ஸ் பைட்டில் பறந்து பறந்து வில்லனை அடிக்கும்+அடிவாங்கும் தனுஷ் முகத்தில் இருக்கும் கண்ணாடி மட்டும் கழன்று விழவே இல்லை. அது எப்படி என இயக்குனர் பாலாஜி மோகனை தான் கேட்க வேண்டும்.

க்ளாப்ஸ்
சாய் பல்லவி நடிப்பு.

மொத்த படத்தையும் தோளில் தாங்கி நின்ற தனுஷ்.

யுவன் இசை.

பல்ப்ஸ்
எளிதில் கணிக்கும்படி இருந்த இரண்டாம் பாகம்.

லாஜிக் ஓட்டைகள்.

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு மாரி 2 மேலும் ஒரு மாஸ் மெர்சல் படம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!