ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் – சினிமா விமர்சனம்


பள்ளி மாணவரான ஷமீக் மூர் நல்ல ஒழுக்கமானவனாக மாற வேண்டும் என்று போலீஸ் அதிகாரியான அவனது அப்பா பிரையன் ஷமீக்கை வேறு பள்ளியில் சேர்க்கிறார். புதிய பள்ளி மீது ஈர்ப்பில்லாமல், தனக்கு பிடித்த கலர் பெயிண்டிங் செய்வதையே விரும்புகிறார்.

அதற்காக ஷமீக்கின் மாமா மஹர்ஷலா அலி அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருக்கும் சுரங்கப்பாதையில் உள்ள இடமொன்றை காட்டுகிறார். அதில் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஷமீக்கை ஸ்பைடர் ஒன்று கடித்துவிடுகிறது.

அதன்பின்னர் தனக்குள் வித்தியாசமான உணர்வு ஏற்படுவதை உணரும் ஷமீக், ஒரு ஸ்பைடர்மேன் தானே இருக்கமுடியும், தானும் ஸ்பைடர் மேனா என்று ஆச்சரியப்படுகிறார். இந்த நிலையில், விபத்தில் தனது குடும்பத்தை இழந்த லீவ் ஸ்கிரீபர் போர்டல் மிஷின் மூலமாக இறந்த தனது மனைவி, குழந்தையை நிகழ்காலத்திற்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்குகிறார்.


இதனால் பல்வேறு உயிர்சேதங்கள் ஏற்படும் என்பதால், ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர், அந்த இடத்திற்கு வந்து லீவ் ஸ்கிரீபரை தடுக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், அந்த இடத்திற்கு வரும் ஷமீக், ஸ்பைடர் மேனுக்கு உதவி செய்கிறார்.

ஆனால், லீவ் ஸ்கிரீபரை முழுவதுமாக தடுப்பதற்குள் ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர் உயிரிழக்கிறார். உயிர் பிரியும் நேரத்தில் அந்த போர்டல் மிஷினை அழிப்பது குறித்த தகவலை பீட்டர் பார்க்கர் ஷமீக்கிடம் சொல்லிவிடுகிறார்.

இதையடுத்து போர்டல் மிஷனை அழிக்கும் வேலை தன்னுடையது என்பதை உணரும் ஷமீக், அந்த போர்டல் மிஷினை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அதற்குள், அந்த போர்டல் வழியாக விதவிதமான ஸ்பைடர்மேன்கள் வருகிறார்கள்.

இதனால் குழப்பத்திற்குள்ளாகும் ஷமீக், அந்த போர்டலை அழித்தாரா? விதவிதமான ஸ்பைர்மேன்கள் அங்கு எப்படி வந்தார்கள்? அவர்கள் திரும்பி சென்றார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.


இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் பாகங்கள் அனைத்தையுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அந்த வகையில் அனிமேஷன் வாயிலாக பார்த்து ரசிக்கும்படியாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ரோட்னே ரோத்மேன். அனிமேஷனில் காமிக்ஸ் சம்பந்தப்பட்டவற்றை இணைத்திருப்பது கவனிக்க வேண்டியது. ஸ்பைர்மேன்களின் வித்தியாசமான தோற்றம், குறிப்பாக பன்னி தோற்றமுடைய ஸ்பைடர்மேன் செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் கவரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 3டியில் படத்தை பார்க்கும் போது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது.

வழக்கம்போல தமிழ் டப்பிங் அசத்தல். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்கள் வந்து சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க முழுக்க வண்ணமயமாக இருப்பது குழந்தைகளை கவரும். இசையில் டேனியல் பெம்பர்டன் மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் `ஸ்பைடர்-மேன் புதிய பிரபஞ்சம்’ காண வேண்டியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!