ஆடவர் – சினிமா விமர்சனம்


அரசு வேலையில் இருக்கும் நான்கு இளைஞர்களுக்கு சென்னையில் நடந்த வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் எதிர்காலத்தில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க புதிய திட்டத்தை வகுத்து தரவும் மேலதிகாரிகள் பணிக்கிறார்கள்

அவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து ஒரு வீட்டில் வாடகைக்கு தங்குகின்றனர். அங்கு ஒரு சமையல்காரர் இருக்கிறார். ஒரு சிறுவனின் ஆவியும் இருக்கிறது.

பூசாரி அடக்கி வைத்திருந்த அந்த பேய் ஒரு இளைஞன் அஜாக்கிரதையாக செய்த காரியத்தால் வெளிவந்து அவனோடு ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த இளைஞன் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. சமையல்காரனையும் அது துன்புறுத்துகிறது. பேயாக இருக்கும் சிறுவன், அந்த வீட்டு உரிமையாளர் பேரன் என்பதும் சொத்துக்காக இருவரையும் சலவை தொழிலாளி கொன்று இருப்பதும் தெரிய வருகிறது.

வாடகைக்கு தங்கிய இளைஞனை வைத்து கொலையாளியை பழிவாங்க பேய் முயற்சிப்பதும் அது நடந்ததா? இல்லையா? என்பதும் மீதிக்கதை.


பெண்கள் இல்லாமல் முழுக்க ஆண்கள் நடித்துள்ள படம். ராபர்ட், சரவணன், சேதுபதி ஜெயச்சந்திரன், தமிழடியான் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பேயாக வரும் சிறுவன் கிரண் மிரட்டுகிறான். கண்களை உருட்டுவது, இளைஞரின் தோளில் உட்கார்ந்து பயமுறுத்துவது, குரூரமாக சிரித்து கழுத்தை நெரிப்பது என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குழந்தை நட்சத்திரமாக மனதில் நிற்கினான். கானா உலகநாதன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.

ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் படத்தை பேய் வந்த பிறகு விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஸ்ரீரஞ்சன். அவரது ஒளிப்பதிவில் சென்னை வெள்ள காட்சிகள் கண்களை விரிய வைக்கின்றன. கிளைமாக்சை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். தஷியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கின்றன.

மொத்தத்தில் ‘ஆடவர்’ சுமாரானவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!