பரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்


திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர். ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.

ஊருக்காக போராட வேண்டுமென்றால், ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார். எதையும் வெளிப்படையாக பேசும் கதிருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அவரது வகுப்பில் படிக்கும் யோகி பாபுவுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. இந்த காரணத்தாலேயே இருவரும் நண்பர்களாகின்றனர்.

அதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. மற்றவர்களை விட கதிருடன் பேச ஆவல் கொள்கிறார். கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.


இந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். தனது நண்பனிடம் ஒரு நல்ல துணியை வாங்கி போட்டுக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது. கயல் ஆனந்தியை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரது தந்தையான மாரிமுத்து மற்றும் ஆனந்தியின் அண்ணன் கதிரை ஒரு அறையில் பூட்டிவைத்து அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.

இதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார். ஆனால் விடாத கருப்பாக கதிருக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.

இந்த பிரச்சனை கல்லூரி முதல்வர் வரை செல்கிறது. அந்த கல்லூரி முதல்வர், தனது அனுபவத்தை கதிருக்கு அறிவுரையாக கூறி, கதிரை தேற்றிவிடுகிறார். மேலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார்.

கல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். மேலும் கதிரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்கள்.


கடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா? தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா? ஆனந்தியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதிருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக பரியேறும் பெருமாள் அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொரு முறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கயல் ஆனந்தி இன்முகத்தோடு வருகிறது. தன்னை சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதை அறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். கயல் ஆனந்தியை இனிமேல் ஜோ ஆனந்தி என்று கூறும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக, பதியும்படியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.


மற்றபடி மாரிமுத்து, சண்முகம், லிங்கேஸ்வரன், கராத்தே வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்களும் கலைஞர்களோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

படத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

மொத்தத்தில் `பரியேறும் பெருமாள்’ சிறப்பான படைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.