தொட்ரா – சினிமா விமர்சனம்


ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாயகன் பிரித்விராஜன் கல்லூரியில் படித்துக் கொண்டே பேப்பர் போடும் வேலை பார்த்து வருகிறார். நாயகி வீணாவும் அதே கல்லூரியிலேயே படிக்கிறார். ஒருநாள் பேப்பர் போடும் போது நாயகியை பார்க்கும் பிரித்விராஜனுக்கு, கண நேரத்தில் வீணா மீது காதல் வந்து விடுகிறது. வீணா பின்னாலேயே சென்று தனது காதலை சொல்ல முயற்சி செய்கிறார்.

ஒருகட்டத்தில் பிரித்விராஜனின் காதலை புரிந்து கொள்ளும் வீணாவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். வீணாவின் அப்பா கஜராஜ் மற்றும் அண்ணன் எம்.எஸ்.குமார் ஜாதிக் கட்சியை சேர்ந்தவர்கள். ஜாதி வெறியோடு இருக்கும் இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்த இருவர் இணைவதையே தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வீணாவின் காதல் எம்.எஸ்.குமாருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து உடனடியாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக வீணா, பிரித்விராஜனுடன் ஓடிவிடுகிறார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கஜராஜ் இறந்துவிடுகிறார்.


பின்னர் திருமணமான தனது தங்கையை பிரித்விராஜனிடம் இருந்து பிரித்து விடுகிறார் எம்.எஸ்.குமார். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? எம்.எஸ்.குமாரின் ஜாதி வெறிக்கு முடிவு வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரித்விராஜ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்தாலும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கேரளாவை சேர்ந்த நாயகி வீணா திரையில் பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக வந்துள்ளது.

எம்.எஸ்.குமாரின் நடிப்பு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது, மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. கஜராஜ், ஏ.வெங்கடேஷ் உள்ள மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர்.


தனது முதல் படத்திலேயே ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். ஜாதியால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் பாதிக்கப்படுபவர்களை மையப்படுத்தி காதல் படமாக கதை நகர்கிறது. ஜாதி வெறி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாக படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள். அதுவும் உண்மை கதையை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கம் ரகம் தான். பின்னணி இசையின் மூலமும் வலுசேர்த்திருக்கிறார். செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கிராம சாயலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் `தொட்ரா’ ஜாதியை விடுறா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!