60 வயது மாநிறம் – சினிமா விமர்சனம்


சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார். இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா கவனித்து வருகிறார்.


விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்ல முடிவு செய்கிறார்.

அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன் சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ் தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர் அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.


அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் ராதாமோகன்.

இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன் பாசப்பிணைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!