பல லட்சம் கோடியை கைப்பற்ற நடக்கும் போராட்டம் – சாஹோ விமர்சனம்

நடிகர் பிரபாஸ்
நடிகை ஸ்ரத்தா கபூர்
இயக்குனர் சுஜித் ரெட்டி
இசை தனிஷ்க் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய்
ஓளிப்பதிவு மதி
48100
ராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு ஆனந்த் இருக்கிறார். இவருடைய மகன் சன்கி பாண்டே அடுத்தாக தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

தனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வருகிறார். அங்கு ஜாக்கி ஷெராப் கொலை செய்யப்படுகிறார்.

அதே சமயம் நூதனமான முறையில் ஒரு திருட்டு நடக்கிறது. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.

இந்த திருட்டு, ராய் கூட்டமைப்பு வரை செல்கிறது. ராய் நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் கோடி அளவில் உள்ள பணத்தை கைப்பற்ற முன்னாள் தலைவர் டீனு ஆனந்தின் மகனான சன்கி பாண்டேவும், ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் அந்த பணத்தை யார் கைப்பற்றினார்கள்? பிரபாஸ் யார்? பிரபாஸ் திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாலிவுட்டில் வெளியான ‘தூம் 1’ மற்றும் ‘தூம் 2’ பட பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் இறுதியில் தமிழில் வெளியான ‘ராஜாதிராஜா’ படம் போல் கதை மாறுகிறது. தூம் படங்களில் பிரம்மாண்டமான முறையில் திருட்டு நடக்கும். அதுபோல், இந்த படத்திலும் பிரம்மாண்டமாக திருடுகிறார் பிரபாஸ்.

வழக்கமான பிரபாஸை இப்படத்தில் பார்க்க முடியவில்லை. வழக்கமான பிரபாஸ் திரையில் தோன்றியிருந்தாலே அதிகமாக ரசித்திருக்கலாம். இறுதியில் மட்டுமே பிரபாஸின் நடிப்பை பார்க்க முடிகிறது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரத்தா கபூர். படத்திற்கு பெரிய பலம் அருண் விஜய்யின் நடிப்பு. லுக், பாடி லான்ங்வேஜ் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுஜித் ரெட்டி. ஆனால், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் மொழி புரியவில்லை என்றாலும் கதை புரியும். இந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும் கதை புரியவில்லை. காட்சிகள் பார்ப்பதற்கும் சுவாரஸ்யம் இல்லை. திரையில் தோன்றும் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை கவரவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரியதாக எடுபடவில்லை.

சாஹோ விமர்சனம்

தனிஷ்க் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘சாஹோ’ சாதாரணம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.