அழகின் பொம்மி – சினிமா விமர்சனம்


படம் ஆரம்பத்தில் நாயகன் ஆனந்த் பாபு, மனநிலை பாதிக்கப்பட்டு சிறுவயது குழந்தை போல் இருந்து வருகிறார். இவரது நண்பரான விஜய் கைலாஷ், அவரை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் பாபு ஏன் இப்படி ஆனார் என்பதை பற்றி பிளாஸ்பேக் நகர்கிறது.

மலை சூழ்ந்து இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆனந்த் பாபு, அம்மாவுடன் இருந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விஜய் கைலாஷும், ஆனந்த் பாபுவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். சிறுவயதில் தன்னுடன் விளையாடிய நாயகி சன்விகாவை பார்த்ததும் ஆனந்த் பாவுக்கு பிடித்து விடுகிறது.

மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு, நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆனால், சன்விகாவின் பெற்றோர்கள், சன்விகாவை முறைமாமனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். சன்விகாவின் முறைமாமன், ஒரு குடிகாரன் என்பதாலும், ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்பதாலும், அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.


இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆனந்த் பாபு மனநிலை பாதிக்கப்பட்டவராக எப்படி மாறினார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் பாபு சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், சிறந்த நண்பனாகவும், காதலனாகவும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சன்விகா, நண்பராக வரும் விஜய் கைலாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சன்விகாவின் அப்பாவாக வரும் திருநிறைச்செல்வம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.


வழக்கமான காதல் கதையை வித்தியாசமாக காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.விஜய் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் நிறைய இடம்பெற்றிருக்கிறது. இதனால்தான் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வேண்டும் என்றே இரட்டை அர்த்த வசனங்களை திணித்திருக்கிறார்கள்.

பவதாரணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அசோக்கின் ஒளிப்பதிவு மலைப் பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அழகின் பொம்மி’ அழகு குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!