திட்டிவாசல் – சினிமா விமர்சனம்


மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த ஊர் கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்த கிராமத்தை தன்வசப்படுத்த அமைச்சர் ஒருவர் திட்டமிடுகிறார்.

அதற்காக காவல்துறை, வனத்துறை, அரசியல் என அனைத்தையும் பயன்படுத்தி அந்த ஊர் மக்களை வெளியேற்ற நினைக்கிறார். ஆனால் ஊர் மக்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஊர்த்தலைவரான நாசர் கொல்லப்படுகிறார்.


மேலும் அந்த கிராமத்து இளைஞர்களான நாயகர்கள் மகேந்திரன், வினோத் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்து, நக்சலைட் என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் மகேந்திரனின் காதலியான தனு ஷெட்டி பலாத்காரம் செய்யப்படுறார்.

இவ்வாறாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தனது கிராமத்தையும், ஊர் மக்களையும் தனு ஷெட்டி காப்பாற்ற போராடுகிறார். கடைசியில் அவர்களது மலை கிராமம் மீட்கப்பட்டதா? சிறையில் அடைக்கப்பட்ட ஊர் மக்கள், இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்களா? அமைச்சர்களை பழிவாங்கினாரா? அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.


ஊர்த் தலைவராக வரும் நாசர் தனது அனுபவ நடிப்பை வெளியிப்படுத்தி இருக்கிறார். ஒரு மலைவாழ் கிராமத் தலைவராக அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மகேந்திரன், வினோத் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கின்றனர். தனு ஷெட்டியின் கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. இதுதவிர ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் பற்றிய யதார்த்தமான சூழலை கருவாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரதாப் முரளி. மக்களிடம் உள்ள பிரச்சினைகளும், போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.


ஜி.ஸ்ரீநிவாசனின் ஒளிப்பதிவில் மலைவாழ் பிரதேசத்தை வளமாக காட்டியிருக்கிறது. ஜெர்மன் விஜய், ஹரிஷ், சதீஷ் இசையில் பின்னணி இசை சிறப்பு. பாடல்கள் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் `திட்டிவாசல்’ இயற்கைக்கான போராட்டம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!