தோர் : ரக்னராக் – சினிமா விமர்சனம்


தோரின் உலகமான ஆஸ்கார்டில் தன்னுடைய அப்பா உருவத்தில் இருக்கும் லோகி சந்திக்கிறார். இவன் தந்தை இல்லை என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து தன் அப்பாவை தேடி உலகிற்கு வருகிறார். அங்கு, தன்னுடன் வந்த லோகி, தன்னுடைய சகோதரர் என்பது அப்பா மூலம் தெரிந்துக் கொள்கிறார். இந்நிலையில், தோரின் அப்பா இறக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தோரின் சகோதரி ஹெலா, தோரின் ஆயுதமான சுத்தியலை சாதரணமாக உடைத்தெரிந்து, ஆஸ்கார்டை தன் வசப்படுத்தி, தோரையும், லோகியையும் வேற்று கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார்.

வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டை எப்படி மீட்டெடுக்கிறான் என்பதே தோர் : ரக்னராக் படத்தின் கதை.

மார்வெல்லின் சூப்பர் ஹீரோ பட வரிசையில், இப்படமும் அமைந்திருக்கிறது. மல்ட்டி ஹீரோக்களை வைத்து அவர்களுக்குள்ளே அவர்களை கலாய்த்து மிகவும் சுவாரஸ்யமாக படத்தை இயக்கி இருக்கிறார்


இயக்குனர் தைகா வைடிடி. ஹீரோக்களை வைத்து மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பல பிரம்மாண்டமான காட்சிகள் கண்களுக்கும் விருந்தாகவும், ரசிக்கும் படியாகவும் அமைத்திருக்கிறார்.

தோராக நடித்திருக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், லோகியாக நடித்திருக்கும் டாம் ஹிட்டில்டன், ஹல்க்காக நடித்திருக்கும் மார்க் ரஃபலோ ஆகியோர் நடிப்பில் ஒருத்தருக்கொருவர் குறைந்தவர் இல்லை என்று போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சகோதரியான ஹெலா கதாபாத்திரத்தில் வரும் கேட் பிளாங்கெட் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.


குட்டிக்குட்டியாக பல கதைகள் இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. ஒவ்வொன்றிலும் ரசித்து சிரிக்க அத்தனை காட்சிகள், வசனங்கள். கொஞ்சம் கதை, நிறைய காமெடி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கல் மனிதன் கார்க் அடிக்கும் ஒன் லைனர்கள் சிறப்பு.

ஜாவியரின் ஒளிப்பதிவு திரையை விட்டு கண்களை விலக மறுக்கிறது. அந்தளவிற்கு திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் மதர்ஸ்பாவின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘தோர் : ரக்னராக்’ மிரட்டல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!