உறுதிகொள்- சினிமா விமர்சனம்


12ம் வகுப்பு படிக்கும் கிஷோர் படிப்பில் மிகவும் மக்காக இருக்கிறார். இருப்பினும், சேட்டை செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால், அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடிக்கடி அடிவாங்குகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவியான ஹீரோயின் மேகனாவை காதலிக்கிறார்.

12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காதல் கைகூடும் என்பதால் கிஷோர், பொது தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறார். இதனால், அவரது அப்பா வீட்டை விட்டு துரத்த, பசங்களுடன் சேர்ந்து குடிப்பது, கோலி விளையாடுவது என்று ஊர் சுற்றி வருகிறார். ஒரு அடிதடி வழக்கில் சிறைக்கும் சென்று வருகிறார்.

இதற்கிடையே, கிஷோரின் காதலி மேகனா, மற்றும் சகோதரி உள்ளிட்ட மூன்று பெண்கள் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை தேடிச் செல்லும் கிஷோருக்கு நடக்கும் பல சம்பவங்களால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.


அப்படி அங்கு என்ன நடந்தது? காணாமல் போன பெண்களின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பள்ளி மாணவராக நடித்துள்ள கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக நடித்துள்ள குண்டு தம்பியும் நடிப்பில் அசத்தியிருப்பதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கதாநாயகியாக வரும் மேகனா, இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும், காளி வெங்கட் வரும் அனைத்து காட்சிகளும் சிரிப்பால் திரையரங்கமே அதிர்கிறது.


படிக்கும் வயதில் படிக்கவில்லை என்றால், வாழ்க்கை எப்படி மாறும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். மேலும், சுற்றுலா தளங்களில் உள்ள மறைவான பகுதிகளில், தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதோடு, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் சொல்லியிருக்கிறார். பள்ளி பருவத்தில் காதலிப்பது என்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், அதை இயக்குனர் காமெடியாக கையாண்டது சிறப்பு. திரைக்கதையின் முதல் பாதியில் ஓரளவிற்கு ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாம்பாதி சற்று தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் செஞ்சி கோட்டையையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். ஜுட் வினிகரின் இசை கதைக்கு ஏற்ப உள்ளது.

மொத்தத்தில் ‘உறுதிகொள்’ மனதில் உறுதி வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி