அவள்- சினிமா விமர்சனம்


சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா திருமணமாகி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைப்பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். டாக்டரான சித்தார்த் மூளை சம்பந்தப்பட்ட சிகிச்சை செய்வதில் சிறந்தவர். இவ்வாறாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகில் மூடப்பட்டு கிடக்கும் வீட்டிற்கு அதுல் குல்கர்ணி தனது குடும்பத்துடன் குடிபெயர்கிறார்.

இதையடுத்து இரு வீட்டாரும் அவ்வப்போது சந்தித்து பேசுகின்றனர். மேலும் விருந்தும் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வாறாக இருக்கும் போது போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் அதுல் குல்கர்ணியின் மூத்த மகளான அனிஷா விக்டருக்கு சித்தார்த் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.


ஒரு நாள் விருந்து முடித்த பிறகு போதையில் அனிஷா அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதிக்கிறார். அனிஷாவை சித்தார்த்த காப்பாற்றுகிறார். இதையடுத்து மனதளவில் அனிஷா பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி அனிஷாவை தனது நண்பரும், மனநல மருத்துவருமான சுரேஷிடம் அழைத்துச் செல்கின்றனர். அதே நேரத்தில் அவர்களது வீட்டில் சில அமானுஷ்கள் நிகழ்வது போன்ற அனுபவமும் ஏற்படுவதை உணர்கின்றனர்.

அதனை உறுதிப்படுத்த பாதிரியாரான பிரகாஷ் பேலவாடி அவர்களது வீட்டிற்கு வருகிறார். அதேபோல் அவினாஷ் ரகுதேவனும் அவர்களது வீட்டில் ஏதேனும் அமானுஷ்யங்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.


இறுதியில் அவர்களது வீட்டில் அமானுஷ்யங்கள் ஏதும் இருந்ததா? அனிஷா விக்டர் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? அவள் யார்? அவளுக்கு என்ன நடந்தது? அவள் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைக்களத்தில் சித்தார்த்தின் நடிப்பும் புதுமையாக ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு டாக்டர், கணவன் என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தற்கு ஏற்றவாறு சிறப்பாகவே நடித்திருக்கிறார். பொதுவாகவே ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுப்பார் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

அதுல் கல்கர்னி, சுரேஷ், பிரகாஷ் பேலவாடி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அனிஷா விக்டரின் கதாபாத்திரம் தொடக்கம் முதல் கடைசி வரை படத்தை முன்னெடுத்து செல்கிறது. அத்துடன் ஒரு த்ரில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அவினாஷ் ரகுதேவன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.


ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையே படத்திற்கு வலுவை கூட்டியிருக்கிறது. படத்தில் வரும் த்ரில் காட்சிகள், அமானுஷ்யமா? அல்லது கதாபாத்திரத்தின் கற்பனையா என்று எதிர்பார்ப்பை தூண்டுவதுடன், விறுவிறுப்பையும் கூட்டுகிறது. முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாகத்தில் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. படத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏ சான்றிதழுக்கு ஏற்றவாறு திகில் காட்சிகளும், அவ்வப்போது வரும் முத்தக்காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைகிறது.

கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்திற்கு வலுவை கூட்டியிருக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும் திகிலை உண்டுபண்ணும்படியாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் `அவள்’ திகிலூட்டுகிறாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி