ஆதிபுருஷ் திரைப்படமல்ல அது ராமாயணம்.. பிரபாஸ் பேச்சு

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், “ஆதிபுருஷ் திரைப்படத்தை சினிமா என்று சொல்லக்கூடாது. இது ராமாயணம். இந்த படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம். ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக நினைக்கிறேன்.

இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோது நடிகர் சிரஞ்சீவி நீ ராமராக நடிக்கிறாயா? என்று கேட்டார். ஆமாம் சார் என்று சொன்னேன். அது உண்மையில் அதிர்ஷ்டம். அனைவருக்கும் கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி பாராட்டினார். ஆண்டுக்கு இனி இரண்டு மூன்று படங்களில் நடிப்பேன்” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!