தி ஹரிகேன் ஹீஸ்ட் – சினிமா விமர்சனம்


சில வருடங்களுக்கு முன்பு ஹரிகேன் ஆண்ட்ரூ என்ற சூறாவளி அல்பமாவில் உள்ள கல்போர்ட் எனும் ஊரை அழித்திருக்கிறது. அந்தச் சூறாவளியில் டோபி கெபெல் – ரையன் வான்டென் சகோதரர்கள், தங்களது அப்பாவை சிறுவயதில் இழந்துவிடுகிறார்கள். அதன்பின் சில வருடங்கள் பின், டோபி கெபெல் வானியல் ஆராய்ச்சியாளராகவும், ரையன் கடல் துறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

அதேஊரில் அமெரிக்காவை எதிர்த்து, அங்கிருக்கும் பணங்களை திருட ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது. அந்த பணங்களை பாதுகாவலராக மேகி கிரேஸ் வேலை பார்க்கிறார். மறுபக்கம் சூறாவளி வரும்போது அதை பயன்படுத்தி ஒட்டுமொத்த தொகையையும் சூறையாட அந்த கும்பல் திட்டம் போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மழையின் காரணமாக மின்சார வசதி செயலிழக்கிறது. உள்ளே பல பாதுகாப்புக் கருவிகளுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். திடீரென ஒருநாள் அங்கிருக்கும் ஜெனரேட்டரிலும் பிரச்னை ஏற்பட, சரிசெய்ய ரையன் உதவியை நாடிச் செல்கிறார், மேகி கிரேஸ்.


இதைப் பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல், பணத்தை கொள்ளையடிக்க செல்கிறார்கள். அங்கிருக்கும் பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகாளாக சிறை பிடிக்கிறது. அங்கு திரும்பி வரும் மேகி கிரேஸ் மீதும், ரையன் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.

இதில் மேகி கிரேசை தப்பிக்கச் செய்கிறார் ரையன். பல நவீன பாதுகாப்புகளைக் கொண்ட பணப் பெட்டகத்தைத் திறக்க மேகி கிரேசால் மட்டும்தான் முடியும் என்பதால், கொள்ளைக்காரர்கள் அவரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து அந்த பணப் பெட்டகத்தைக் காப்பாற்றும் மிஷினில் இறங்குகிறார், மேகி கிரேஸ். நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட டோபியும் தன் சகோதரரைக் காப்பாற்ற மேகி கிரேசோடு இணைகிறார்.

இறுதியில் டோபியும், மேகி கிரேசும் கொள்ளையர்களிடம் ரையனை காப்பாற்றினார்களா? பணத்தை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் புயலுக்குள் பயணிப்பதால் அதற்குள் நாமும் சிக்கியதுபோல ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரள வைத்திருக்கிறது. படம் ஆரம்பமும், இறுதியும் விறுவிறுப்பின் உச்சத்தில் நம்மை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘தி ஹரிகேன் ஹீஸ்ட்’ ரசிக்கும் சூறாவளி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி