டைரி – விமர்சனம்

ஊட்டியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி நடக்கும் விபத்தினால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டராக பயிற்சி முடித்த அருள்நிதி தன்னுடைய முதல் வழக்காக நகைக்காக புதுமணத் தம்பதியை கொலை செய்யும் கும்பலை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். 16 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.

ஊட்டி, கோயமுத்தூர் வழித்தடத்தில் பேருந்துப் பயணமும் அதில் பயணித்தவர்களும் என்ன ஆனார்கள் என்கிற திகில் சம்பவம் வெளியாகிறது. அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை காட்டி திகிலுடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.


அருள்நிதி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். பேருந்து பயங்கரத்தை முகபாவனை மூலம் ரசிகர்களுக்குச் சொல்லும் அருள் சண்டை காட்சியில் வேகம் காட்டுகிறார். பவித்ரா மாரிமுத்துவை காதலிக்கும் போது ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அமானுஷ்ய கதைக்கு வேண்டிய பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் அருள்நிதி.


முக்கிய கதாபாத்திரங்களை விட படத்தில் காட்டப்படும் துணை கதாபாத்திரங்களுக்கு அதிக காட்சிகளை கொடுத்திருக்கிறது கதையின் போக்கு. பவித்ரா மாரிமுத்து விசாரணையில் அருள்நிதிக்கு உதவியாக மாறிப்போவது சறுக்கல். கோயமுத்தூர் பஸ் ஸ்டாண்ட், அதன் பயணம் என்று முதல் முறையாக பேருந்தை வைத்து திகில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.  

முதல் பாதி குழப்பமாக சென்றாலும் அதன் காரணத்தை பின் பாதியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன். பின் பாதியில் வரும் அரைமணிநேர படம் நம்மை திகிலடிக்க வைக்கிறது. கிஷோரின் விபத்திற்கு காரணமும், அருள்நிதி யார் என்பதும் சஸ்பென்சாக விரிவது நல்ல இடம். கிளைமேக்ஸ் காட்சியில் பேருந்து வரும் போது திக் திக் என்றிருக்கிறது. அம்மாவை பார்க்க காத்துக் கிடக்கும் அந்த பாத்திரம் நெகிழ்ச்சி. எடுத்துக் கொண்ட கதை புதிது. அதை வெளிப்படுத்திய திரைக்கதை தான் தெளிவில்லாமல் இருக்கிறது. ஆனாலும் திகில் பட ரசிகர்களுக்கு பேய் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் முதல் பாதியை படமாக்கியிருந்த விதம் பாராட்டுக்குரியது. எடிட்டர் ராஜா சேதுபதிக்கும் கடும் உழைப்பு தேவைப் பட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ரோன் யதோன் யோகன் இசை பயத்தை உண்டுபண்ணுகிறது. ஜெயப்பிரகாஷ், ஷாரா, சாம்ஸ், அஜய்ரத்னம், டி.எஸ்.ஆர். ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.

மொத்தத்தில் டைரி – திகில் பயணம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!