அஜித்துடன் ஜோடி சேரும் வாய்ப்பை இழந்துவிட்டேன்..!! வருந்தும் பிரபல தொகுப்பாளினி..!!


தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது…

“இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?”

“பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப்பினேன். பிறந்தநாளுக்கு முந்தையநாள் சிவா எனக்குப் போன் பண்ணி, ‘டிடி நாளைக்கு நமக்கு ஹேப்பி பார்த்டே’னு சொல்லி சிரிச்சார். நாங்க ரெண்டுபேரும் பல வருடம் ஒண்ணா பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கோம். ஒரேநாள், ஒரே வருடம். அவர் காலைல ஆறு மணி, நான் சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறந்தவங்க. ஆனா, இந்த வருடம் எங்க ரெண்டுபேருக்கும் செம்ம பிஸியா இருக்கு. எனக்குத் தெரிந்து சிவாவோட வெற்றியை, இந்த உலகத்துக்கே கிடைத்த வெற்றி மாதிரி எல்லோரும் கொண்டாடுறாங்க. அதுதான் அவருடைய பலம்.”


“கெளதம் மேனன் படத்துல எப்படி இணைந்தீங்க?”

“இந்த வருடம் எனக்கு இரட்டிப்பு சந்தோசம். ஒண்ணு ‘உலவிரவு’, இன்னொன்னு ‘துருவநட்சத்திரம்’. ‘உலவிரவு’ பத்தி கெளதம் மேனன் சார் என்கிட்ட சொன்னப்பவே, ‘நீங்க நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா… கண்டிப்பா நான்தான் நடிக்கணுமா’னு கேட்டேன். அதுவும் ரொமான்டிக் பாட்டுனு சொன்னதும், ரொம்பப் பயந்துட்டேன். நாம அதுல நடிச்சு கெளதம் சாரோட படங்கள்ல வர்ற ரொமான்ஸ் சீன்களின் அழகியலைக் கெடுத்துடக்கூடாதுனு தோணுச்சு. எனக்கு ஐந்து பிடித்த படங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டா, அதுல மூணு படங்கள் கெளதம் சாரோட படங்களாகத்தான் இருக்கும். அப்படி இருக்கிற ஒருத்தர், எனக்கு நடிப்பு கத்துக்கொடுத்திருக்காங்கனு நினைக்கும்போது, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.”

“தனுஷ் இயக்கத்துல முதன்முதலா நடித்த அனுபவம் மற்றும் அவரை இயக்குநரா பார்த்த தருணம் எப்படி இருந்துச்சு?”


“தனுஷ் சாரை இயக்குநரா பார்க்கும்போது, அவருடை உழைப்பு என்னை அசந்துபோக வெச்சுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல மனுசன் பேய் மாதிரி உழைக்கிறார். ஓவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா அலசி ஆராய்ந்து பார்ப்பார். நடிச்சு முடிந்ததும், ‘நாம நடிச்சது சூப்பரா இருக்கு’னு நினைப்போம். ஆனா அவர், ‘இந்த இடத்துல தவறு இருக்கு’னு நோட் பண்ணி ரீ-டேக் போவார். அப்படி ஒரு சூப்பர் பவர் தனுஷ் சாருக்கு இருக்கு.

முதல்ல ஒரு வேலையில இறங்குறதுக்கு முன்னாடி, அந்த வேலையைப் பத்தி நமக்கு ஓரளவுக்காவது தெரிஞ்சிருக்கணும். சினிமா வாய்ப்புகள் வந்தப்போ, பலபேர்கிட்ட எனக்கு நடிப்பு தெரியாதுனு சொல்லி ஒதுங்கிட்டேன். ஆனா, தனுஷ் சார் மட்டும்தான், ‘நீதான் இந்த ரோல்ல நடிக்கணும்’னு பிடிவாதமா இருந்தார். சாதாரண களிமண்ணா இருந்த என்னை அழகான பானையா மாத்துனது அவர்தான். அவர் மெனக்கெடுறதைப் பார்த்துட்டு, நானும் பொறுப்பா மாறிட்டேன். எப்படியாவது நல்ல அவுட்-புட் கொடுத்துடணும்ங்கிறதுல தெளிவா இருந்தேன். ‘உலவிரவு’ ஷூட்டிங்கு முன்னாடி, பாட்டுக்கான காஸ்டியூம்ஸ் ரெடி பண்ணிட்டு இருந்தப்போ, தனுஷ் சாரைப் பார்த்தேன். அவரோட ஆசிர்வாதத்தோடதான் ஷூட்டிங்குப் போனேன்.”

“எப்போதாவது இந்தப் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பை இழந்துட்டோமேனு வருத்தப்பட்டிருக்கீங்களா?”


“ஒருதடவை அஜித் சாரோட படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஒருசில பெர்ஷனல் காரணங்களால என்னால நடிக்க முடியலை. இப்போவும் தல படத்துல நடிக்க முடியலையேங்கிற வருத்தம் நிச்சயமா இருக்கு. அவரை இதுவரை நான் நேர்லகூட பார்த்தது இல்லை. இனி அவர் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும் பரவாயில்ல, அவரை ஒருதடவையாவது நேர்ல பார்த்துடணும்னு ரொம்ப ஆசை.”

“கால்ல அடிபட்டு, அதுல இருந்து மீண்டு வந்த காலகட்டம் உங்களுக்கு எப்படியான உணர்வைக் கொடுத்துச்சு?”

“3 வருடத்துக்கு முன்னாடி அடிபட்டதுக்கு, தப்பான சர்ஜரி பண்ணிட்டாங்க. இப்போ 4 மாசத்துக்கு முன்னாடி சரியா சர்ஜரி பண்ணினதுக்கு அப்புறம், ஐ ஆம் ஓகே. இப்போ என்னால நடக்க முடியுது, டான்ஸ் ஆட முடியுது. முன்னாடி வீல் சேர்ல இருந்தபோதுகூட, நான் கவலைப்பட்டது கிடையாது. அப்பவும் ‘காஃபீ வித் டிடி’, ‘அச்சம் தவிர்’ போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டுதான் இருந்தேன். வேலைக்கு ஒருநாள்கூட லேட்டா போனது கிடையாது. நானா இந்த விஷயத்தை சொல்லலைனா, யாருக்குமே அடிபட்டது தெரிந்திருக்காது. என்னைச் சுத்தி பாசிட்டிவ் வெளிச்சம் எப்போதும் இருக்கணும்னு நினைப்பேன். வாழ்க்கையில இதெல்லாம் ஒரு பாடம். அவ்ளோதான்.”


“பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில், டிடி இடத்தை நிரப்ப யாருமே இல்லைனு பேசுறாங்க. இதைக் கேட்கும்போது எப்படி இருக்கு?”

“இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருத்தவங்களுக்கு இன்னொருத்தவங்க மாற்றுப் பொருளா கட்டாயம் இருக்கமுடியாது. கண்டிப்பா என்னைவிட பெட்டரா ஹோஸ்ட் பண்ற நிறைய பேர் லைன்ல இருக்காங்க. பெப்சி உமா, உமா பத்மநாபன், ஜேம்ஸ் வசந்தன், என்னோட அக்கா… இவங்க எல்லாம் பண்ணதைவிடவா நான் நல்லா ஹோஸ்ட் பண்றேன்? நான் ஸ்கூல் படிக்கும்போதே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சதுனால, எல்லார் மனசுலேயும் நல்லாப் பதிஞ்சுட்டேன். இப்போ என்கூட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறவங்களே, என்னைவிட பெட்டரா பண்றாங்க. ஸோ, நம்ம கவனமா இருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.”

“உங்களுக்கான காஸ்டியூம் செலெக்ஷன் பத்திச் சொல்லுங்க?”

“என்னோட காஸ்டியூம்ஸ் அழகா இருக்கிறதுக்குக் காரணம், என் அக்காதான். தவிர, நிறைய காஸ்டியூம் டிசைனர்கள் என்னுடைய நிகழ்ச்சிக்காக வேலை பார்க்குறாங்க. இப்போ புதுசா ஒரு காஸ்டியூம் டிசைனர் என்கிட்ட வந்து வாய்ப்பு கேட்டாலும், அவங்ககூட உட்கார்ந்து பேசுவேன். அவங்க ஐடியா எனக்குப் புடிச்சிருந்ததுனா, கட்டாயம் காஸ்டியூகளை பண்ணச்சொல்வேன்.


நான் ஒருபோதும் விலை அதிகமா இருக்கிற காஸ்டியூம்களை வாங்கியது கிடையாது. கடையில இருக்கிறவங்க என்னைப் பார்த்ததும், 10,000 ருபாய் புடவையை எடுத்துக் காட்டுவாங்க. அது எல்லாத்துக்கும் ‘நோ’ சொல்லிடுவேன். 4,000 ரூபாய்க்குமேல டிரெஸ் எடுக்குறது கிடையாது. ஏன்னா, என்னுடைய நிகழ்ச்சிகளைப் பார்த்து யாராவது அதேமாதிரியான காஸ்டியூம்ஸ் வேணும்னு கடையில போய்க் கேட்டா, வாங்குற அளவுக்கு விலை குறைவா இருக்கணும். இந்தமாதிரி மக்களோட மக்களா இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.”

“கமலை ஒரு நிகழ்ச்சியில பார்த்த நீங்க, முத்தம் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டீங்க. அந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்த கமலின் தற்போதைய செயல்பாடுகளைப் பத்தி என்ன நினைக்குறீங்க?”

“நாம என்ன விரும்புறோம் என்பதைவிட அவருக்கு சினிமா வேணுமா, அரசியல் வேணுமா என்பதுதான் முக்கியம். அவருடைய அரசியல் பிரவேசம் சினிமாத் துறைக்கு ஒரு இழப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது பண்ற வேலையிலதான் ஈடுபடப்போறார்னு நினைக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு.”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி