பிரம்மாண்ட நாயகன் – சினிமா விமர்சனம்


சிறு வயதில் இருந்தே தீவிர பெருமாள் பக்தனாக வரும் நாகர்ஜூனா, ஒருமுறையாவது பெருமாளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெருமாளை பார்க்க வேண்டும் என்றால் கடும் தவம் செய்ய வேண்டும் என்று நாகர்ஜூனாவின் குருநாதர் கூறுவதை கேட்டு, தனிமையான இடம் ஒன்றில் தவம் புரிகிறார். தவத்தின் நடுவே அவருக்கு சில இடைஞ்சல்கள் வருகிறது. யாரோ ஒரு சிறுவன் தன்னை தொந்தரவு செய்வதை அறிந்து கண்விழித்து, அந்த சிறுவனை அனுப்பி விடுகிறார்.

பின்னர் தனது குருநாதரிடம் சென்று தான் கடும் தவம் புரிந்தும் பெருமாள் என்னை பார்க்க வரவில்லையே என்று வருத்தத்துடன் கேட்கும் நாகர்ஜூனாவிடம், நடந்தது அனைத்தையும் கேட்கிறார் அவரது குருநாதர். தான் தவத்தையும், தனது தவத்தின் நடுவே சிறுவன் வந்ததையும் கூறுகிறார். இதைகேட்ட குருநாதர், அந்த சிறுவன் தான் பெருமாள் அவதாரத்தில் வந்ததாக கூற, பெருமாளை நான் விரட்டி விட்டேனே என்று வருத்தப்படும் நாகர்ஜூனாவுக்கு, பெருமாளை பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலும் கூடுகிறது.


பின்னர் நாகர்ஜூனாவுக்கும், அவரது உறவுக்கார பெண் விமலா ராமனுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நாகர்ஜூனா, திருப்பதி கோயிலுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருப்பதி கோவிலின் தர்மகத்தாவாக இருக்கும் ராவ் ரமேஷ், நிறைய குற்றங்கள் செய்து வருவதுடன் தன்னை திருப்பதி கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதால் கோபமடையும் நாகர்ஜுனா அந்நாட்டு மன்னன் சம்பத்திடம் இதுகுறித்து முறையிடுகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

இதுகுறித்து விசாரிக்கும் சம்பத், ராவ் ரமேஷை அந்த பதவியில் இருந்து நீக்கி, திருப்பதி கோவிலின் தர்மகத்தாவாக நாகர்ஜூனா நியமிக்கப்படுகிறார். அதேநேரத்தில் திருப்பதி கோவிலுக்கு உட்பட்ட ஆசரமத்தில் தொண்டு செய்து வரும் அனுஷ்காவை கடத்திச் செல்கிறார் ஜெகபதி பாபு.

கடைசியில் நாகர்ஜுனா பெருமாளை சந்தித்தாரா? அனுஷ்கா என்ன ஆனார்? விமலா ராமன் திருமணம் நடந்ததா? திருப்பதி கோவில் என்ன நிலையை அடைந்தது? அதில் நாகர்ஜூனா எந்த இடம் பிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.


தீவிரமான பெருமாள் பக்தனாகவே வாழ்ந்திருக்கிறார் நாகர்ஜூனா. அவரது ஒவ்வொரு செய்கையும், பேச்சும் தான் ஒரு கடவுளின் சீடன் என்பதை வெளிப்படுத்துமாறு இருக்கிறது. அனுஷ்கா வழக்கமான புன்னகையுடன் பெருமாளுக்கு தொண்டு செய்யும் சீடையாக சிறப்பாக நடித்திருக்கிறார். விமலா ராமன் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சம்பத், ராவ் ரமேஷ், பிரம்மானந்தம், ஆதித்யா மேனன், அஷ்மிதா உள்ளிட்ட மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

பெருமாள் பக்தன் மற்றும் திருப்பதி கோவிலை மையப்படுத்தியே கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கே.ராகவேந்திர ராவ். திருப்பதி கோவிலின் வரலாற்றை மையப்படுத்தியே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

கீரவாணியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எஸ்.கோபால ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் `பிரம்மாண்ட நாயகன்’ பிரம்மாண்டம் தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி