நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் -ரித்திகா சிங்

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர். கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறினார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!