ஏண்டா தலையில எண்ண வெக்கல – சினிமா விமர்சனம்


இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார்.

அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது.

அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை கொல்ல வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நான் தரும் டாஸ்க்குகளை நீ செய்ய வேண்டும். அதை நீ செய்ய மறுத்தால் இறந்து விடுவாய் என்று கூறுகிறார்.


எமதர்மன் கொடுத்த டாஸ்க்குகளை எல்லாம் அசார் செய்தாரா? உயிர் பிழைத்தாரா? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இன்ஜினியரிங் படித்திருக்கும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார் அசார். இங்கிலீஷையே தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளும் இவரின் நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. டாஸ்க் கட்டளைக்கு பயந்து இவர் பண்ணும் கலாட்டாக்களில் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி, ஐ.டி அழகியாக வந்து மனதில் நிற்கிறார். அசார் உடனே வரும் சிங்கப்பூர் தீபன், மற்றும் யோகி பாபு ஆகியோரின் காமெடி ஓரளவிற்கு உதவியிருக்கிறது.


வித்தியாசமான கதையை உருவாக்கி அதை திறம்பட கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் பாதியில் மிகவும் பொறுமையை சோதித்துவிட்டார். இரண்டாம் பாதி இறுதியில் தான் படத்தை பார்க்கவே முடிகிறது. இதை தாண்டி டாஸ்க் காட்சிகள் தவிர படத்தில் எந்த ஒரு காட்சியும் பெரிதும் ஈர்க்கவில்லை.

ரகுமானின் தங்கை ரெஹானே நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைக்க வந்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் டூயட் பாடல் கேட்கும் ரகம். வம்சி தரண் முகுந்தனின் ஒளிப்பதிவு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ வைக்காமலே இருக்கலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி