ஸ்ரீதேவியின் மறக்க முடியாத மலரும் நினைவுகள்..!! சோதனைகளை சாதனையாக்கிய தருணங்கள்..!!

பிப்ரவரி 24 ஆம் தேதி இரவிலிருந்து சமூகவலைதளங்கள் முழுவதும் ஒரே ஸ்ரீ தேவி புராணம் தான், இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் ஸ்ரீ தேவியின் இழப்பு ஈடு செய்ய முடியாது தான்.

இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த செய்தியில் ஸ்ரீ தேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்றிருந்தது. அதன் பிறகு எழுந்தவற்றில் பலவும் யூகங்கள் அடிப்படையிலனாவையாகவே இருந்தது. அவர்களுக்கு இன்னும் வலுவூட்ட ஸ்ரீ தேவியின் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் மது அருந்தியிருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

கூடவே போனி கபூர் மீண்டும் ஸ்ரீ தேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஏன் சென்றார், அமிதாப் எப்படி முன் கூட்டியே ட்விட் செய்தார் என தங்களது கற்பனை வளத்திற்கு ஏற்ப இட்டுக்கட்டி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.


வாழ்க்கையின் ஓர் பகுதி :

யாராக இருந்தாலும் சரி குறிப்பாக பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு வாழ்க்கையும், பர்சனல் வாழ்க்கையொன்றும் இருக்கும். இரண்டுக்கும் துளியும் சம்மந்தம் இருக்காது. மக்களிடையே கனவுக்கன்னியாக தன்னை அசைக்க முடியாத கதாநாயகியாக கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவிக்கு பர்சனல் வாழ்க்கையில் அப்படி கோலோச்சிக் கொள்ள முடியவில்லை. இந்த சினிமா, நடிப்பு,பணம்,புகழ் எல்லாம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இல்லாமல் வாழ்க்கையே இது என்றாகிப் போனதால் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.

இக்கரையிலிருந்து… :

புகழின் வெளிச்சம் அடைந்தவுடன், மக்கள் மத்தியில் பிரபலமானவுடன், பணம் கோடி கோடியாக கொட்டியவுடன் அவர்கள் நிச்சயம் ராஜவாழ்க்கை வாழ்வார்கள், எப்போதும் பெரும் மகிழ்வுடனும் பூரிப்புடனும் இருப்பார்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போலவே தான் பிரபலங்களின் வாழ்க்கையும், சாமனியனின் இடத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே பிரம்மாண்டமாகத் தெரிந்திடும்.


குழந்தையிலிருந்தே :

என்ன ஏதுவென்று விவரம் தெரிவதற்கு முன்னரே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார். புகழ் வெளிச்சம் விழத்துவங்கி விட்டது. அதன் பிறகு தாய் தந்தை இழந்து, சினிமாவில் ஓர் நடிகையாக தொடர்ந்து நீடிக்க எத்தனை சிரமங்களை கடந்திருப்பார்.

நடுவில் கடன் பிரச்சனை இவை எல்லாவற்றிற்கும் மேலாக காதல் பிரச்சனை. மிதுன்,போனி கபூர் என இரண்டு திருமணங்கள்.

ஏமாற்றங்கள் :

புகழின் வெளிச்சத்திற்கு எவ்வளவு வேகமாக சென்றாரோ அதே வேகத்தில் ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார் ஸ்ரீ தேவி. ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டு தனக்கான புதிய அத்தியாங்களை தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கிறார்.


தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஸ்ரீ தேவி நடத்திய போராட்டங்களை ரசிகர்களாக கைதட்டி ஆர்பரிக்கும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவை நமக்கு தெரிவதையும் ஸ்ரீ தேவி விரும்ப மாட்டார்.

அழகு :

இந்த சமூகத்தில் பெண்ணென படைக்கப்பட்ட எந்த ஜீவனும் அழகென்ற சாயலை பூசிக் கொண்டு, இந்த சமூகத்தின் சம்பிரதாயங்களையும்,கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு சமூக மானம் காப்பவராக இருக்க வேண்டும் என்ற பிம்பமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவில் வேறு இருக்கிறாரா கூடவே பின் தொடர்ந்து அழகு என்ற விஷயமும் பற்றிக் கொண்டுவிட்டது, இயற்கையாக நடக்கிற மூப்பும் இங்கே பிரச்சனை தான். குழந்தையாய் இருக்கும் போது தனக்கு கிடைக்க ஆரம்பித்த புகழ் தொடர வேண்டும்…. தொடர்ந்து கிடைக்க வேண்டும் என நினைத்து அதற்கான மெனக்கெடல்களை அறுவை சிகிச்சைகள் மூலமாகவும், உணவுக்கட்டுப்பாடுகள் மூலமாகவும் தற்காத்துக் கொண்டார்.


என் வாழ்க்கை :

ஸ்ரீ தேவி இந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றிருப்பாரா என்றால் ஸ்ரீதேவியைத் தவிர யாருக்குமே தெரியாது. அந்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, புகழ் வெளிச்சத்தில் இருப்பதினால் இன்னும் மெனக்கெட வேண்டியது இருந்தது.

இது கேட்கவே சற்று விசித்திரமாக இருக்கிறதல்லவா? என்னுடைய வாழ்க்கையை வேறு யார் யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.நீ இந்த உடையை அணிந்து கொள், உன் முகம் இப்படித் தான் இருக்க வேண்டும், இவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், என அனீச்சையாக, இயற்கையாக நடக்க வேண்டிய விஷயங்களைக் கூட செயற்கையாக திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதிலும் வெற்றி தோல்வி என்ற சந்தர்ப்பங்களுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

புகழின் உச்சத்தில் இருக்கிறாய் அல்லவா அதனால் வெற்றியைத் தவிர உனக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்றே தான் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தது.


வாழ்க்கை :

விரும்பிய வாழ்க்கை வாழ முடியாமல், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையும் நிலையானதா? இதே புகழ் தொடர்ந்து நீடித்திடுமா? என்று பயத்துடனே ஒவ்வொரு நாட்களையும் நகர்த்த வேண்டியிருக்கும்.

கற்பனையாக இப்படியான ஓர் சூழல் நமக்கு நேர்ந்தால் எப்படியிருக்கும் அப்படியான ஓர் வாழ்க்கை நினைக்கவே அவ்வளவு சிரமமானதாக இருக்கும் போது ஐம்பது ஆண்டுகளாக அதே முகமுடியை தக்க வைக்க ஸ்ரீ தேவி எத்தகைய மன அழுத்தங்களை சந்தித்திருப்பார்.

ஜெயலலிதா :

2016 ஆம் ஆண்டு இறந்த தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையும் இப்படியானதாகவே இருந்தது. ஜெயலலிதா வாழ நினைத்த வாழ்க்கை ஒன்று, ஆனால் காலச்சூழல் அவருக்கு இன்னொரு வாழ்க்கை கொடுத்திருந்தது.


சினிமாவிலிருந்து அரசியல் என பயணித்து தொடர்ந்து தமிழகத்தின் முதல்வர் என்ற அந்தஸ்த்தையும் அடைந்திருந்தார். சினிமாவில் இருந்ததை விட இப்போது மக்கள் மத்தியில் தன்னுடைய பிம்பத்தை கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது.

பிறரின் வாழ்க்கை :

அப்படி தனிமை சிறைக்குள் தன்னை அடைத்துக் கொண்ட ஜெயலலிதாவிற்கு அதுவே அழிவின் பாதையை வகுத்துக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் உயிரையே பறித்தது. சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூட தயக்கம் காட்டவேண்டியிருந்தது, எங்கே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது தெரிந்தால் மக்கள் மத்தியில் தன்னுடைய பிம்பம் கலைக்கப்பட்டுவிடுமோ என மிகுந்த கவனத்தில் இருந்தார் ஜெயலலிதா

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி