மறைந்த மர்மங்கள்.. விடை தெரியாத புதிர்கள்..? பூவுலகிற்கு விடைகொடுத்த தாரகை மயிலு..!!


திரைவானில் பெரு நட்சத்திரமாக ஜொலித்தாலும் தனி வாழ்வில் தம்மை அதிகமாக தனிமைப்படுத்தக் கொண்ட தாரகை மயில் மரணத்திலும் விடை தெரியாத புதிர்களுடன் புதைக்கப்பட உள்ளார்.

தமிழகத்தின் சிவகாசி அருகே மீனம்பட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உச்சம் தொட்டவர் ‘மயிலு’ ஸ்ரீதேவி. 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த கதா பாத்திரத்தால் காலம் முழுவதும் கொண்டாடப்பட்டவர் ஸ்ரீதேவி.


ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சினிமாவில் தலையெடுத்துக் கொண்டிருந்த காலங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக போற்றப்பட்டவர் ஸ்ரீதேவி. மும்பையில் செட்டிலாகி இந்தி திரை உலகை தன் வசமாக்கினார்.

இப்படி ரசிகர்களும் திரை உலகமும் உச்சி முகர்ந்து ஏன் வழிபாடே நடத்திய ஸ்ரீதேவின் அகால மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதைவிட அவரது மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது என அறிய முடியாதது பெரும் கொடுமை.

ஸ்ரீதேவி எனும் கலையரசியின் கடைசி நிமிடங்கள் பெரும் வேதனையில் முடிந்ததா? பெரும் மயக்கத்தில் முடிந்ததா? பேரவலத்தால் முடிந்து போனதா? எதுவும் தெரியாத இருட்டு நிமிடங்களாகவே அவை இருக்கின்றன. யார் வாயும் இப்போதுவரை திறக்கப்படவில்லை.


புனைவுகள், யூகங்கள் இவைகளுடன் காயங்கள் என கலந்து வரும் ஒவ்வொரு செய்தியும் அந்த தேவதையின் ரசிகர்களை பாடாய்படுத்துகிறது… கண்ணே… கலைமானே என தாலாட்டுப் பாடி உறங்க வைக்கப்பட வேண்டிய அந்த பொற்சித்திரம் தன்னுடன் ஏராளமான புதிர்களையும் புதைத்துக் கொள்ளப் போகிறது.

இனி எவர் எது சொன்னாலும் ஸ்ரீதேவி எனும் நடிப்புப் பெருநெருப்பின் புகழ் மீது வீசப்பட்ட அந்த கச்சா எண்ணெய் கறைகள் அகன்றுவிடவா போகின்றன?

தமிழ் மண்ணின் ‘செந்தூரப் பூவே’… சென்று வா!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி