சொல்லிவிடவா – சினிமா விமர்சனம்


நாயகன் சந்தன் குமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ் மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு இருக்கிறார்.

தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு சுஹாசினி பாதுகாவலராக இருந்து வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கார்கிலில் போர் நடக்கிறது. இந்த போரை நேரில் படம் பிடிப்பதற்காக அவர்கள் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும் ஐஸ்வர்யாவும் டெல்லி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள்.


டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்த சதீஷ், பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகியோர் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். அதே சமயம், சந்தன் குமாரின் கேமராவும் உடைந்து விடுகிறது. இந்நிலையில், ஒரு கேமராவை வைத்து இருவரும் மாறி மாறி வேலை பார்க்கலாம் என்று சந்தன் குமாரும் ஐஸ்வர்யாவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள்.

கார்கில் போரை படம் பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் மலர்கிறது. இறுதியில் கார்கில் போரை இருவரும் படம் பிடித்தார்களா? காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுஹாசினியின் மகனுடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக சந்தன் குமார் நடித்திருக்கிறார். புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த உடற்கட்டோடு நாயகனுக்கான அந்தஸ்தோடு இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முந்தைய படத்தை விட இப்போது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவருடைய நடனம் ரசிக்க வைக்கிறது.


நாயகனின் தந்தையாக வரும் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி, சுஹாசினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் அர்ஜுன். போர் நடக்கும் இடத்தில் காதல் மலர்வதை அழகாக சொல்லியிருக்கிறார் அர்ஜுன். தனக்கே உரிய தேசப்பற்றை இப்படத்திலும் காண்பித்திருப்பது சிறப்பு. படத்தின் நீளம் கதை ஓட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜெஸ்சி கிப்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வேணுகோபாலின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சொல்லிவிடவா’ இன்னும் சொல்லியிருக்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!