விசிறி – சினிமா விமர்சனம்


தீவிரமான தல ரசிகர் ராம் சரவணா. அதேபோல் தளபதி ரசிகர் ராஜ் சூர்யா. இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள்.

இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா.


இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார் ராஜ் சூர்யா. இவரை நேரில் பார்க்கும் ராம் சரவணா அவரிடம் சண்டைபோடுகிறார். இருவரும் சண்டைப்போடும் காட்சி பேஸ்புக்கில் வெளியாகிறது. இதை கண்டு மிகவும் வருத்தமடைகிறார் ரெமோனா ஸ்டெபனி. மேலும் இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

இதையடுத்து ராஜ் சூர்யாவின் தங்கை தான் ரெமோனா என்பதும் ராம் சரவணாவுக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் எனக்கு தல தான் முக்கியம் என காதலை விட்டுக் கொடுக்கிறார் ராம் சரவணா. அதேநேரத்தில் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி ரெமோனாவும் ராம் சரவணாவை வெறுக்கிறாள்.

கடைசியில் ராம் சரவணா – ரெமோனா ஒன்று சேர்ந்தார்களா? தல – தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராம் சரவணா – ராஜ் சூர்யா இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராம் சரவணா, ராஜ் சூர்யா என இருவரும் தல – தளபதி ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சொல்லப்போனால் தல, தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.


இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரெமோனா கலக்கியிருக்கிறார். நாயகர்களின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர்.

விஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கத்துக்கு வாழ்த்துக்கள். ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ரசிகர்களுக்கான, இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்.

தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `விசிறி’ ரசிகர்களின் கொண்டாட்டம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி