மதுர வீரன் – சினிமா விமர்சனம்


மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் உள்ள மக்களில் ஒரு வகையினர் அங்குள்ள கோவிலுக்குள் செல்லவும், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதபடி தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்றும் ஊர் மத்தியில் அறிவிக்கிறார்.

அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சில குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தும் சமுத்திரக்கனியின் அறிவிப்பால் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி உயிரிழந்துவிடுகிறார். அதேநேரத்தில் அந்த ஊரின் முக்கிய நபரான வேல ராமமூர்த்தியின் தம்பியும், பக்கத்து ஊரில் இருக்கும் மைம் கோபியின் அண்ணனும் உயிரிழந்து விடுகின்றனர்.


இதையடுத்து கணவனை இழந்து தவிக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.

கடைசியில் சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எந்தவித அலட்டலுமின்றி, ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மீனாக்‌ஷிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் தலைவராக சமுத்திரக்கனி கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.


முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தியே படம் நகர்ந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு எதற்காக தடை ஏற்பட்டது. அதன் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளின் எதிர்ப்பு குறைவு தான். நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் செய்யும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.ஜி.முத்தையா. எனினும் படத்தின் கதையில் பலம், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி, படம் மெதுவாக நகர்கிறது. அதேபோல் மற்ற படங்களை போல இல்லாமல், இந்த படத்தில் நாயகன் ஒரு சாதாரண இளைஞனாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையை அடக்கும்படியான காட்சிகளை வைக்காமல் காட்டியிருப்பது பார்க்க புதுமையாக இருக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `மதுரவீரன்’ வீரத்தை கூட்டியிருக்கலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி