பத்மாவதி படத்திற்கு இனிமேல் தடையில்லை..!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!


ராஜஸ்தானில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் அழகும், அவர் நடத்திய ஆட்சியும் முகாலயர்கள் ஆட்சி காலத்தில் மிக சிறப்பாக பேசப்பட்டது.

ராஜபுத்திர இனத்தை சேர்ந்த அவளை அடைய சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆசைப்பட்டான். இதனால் ஏற்பட்ட சண்டை காரணமாக சித்தூர் ராணி பத்மினி சுமார் 75 ஆயிரம் பெண்களுடன் சேர்ந்து கூட்டாக தீக்குளித்து உயிர் நீத்தாள்.

சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு ‘பத்மாவதி’ என்ற பெயரில் பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி சினிமா படம் தயாரித்துள்ளார். இதில் சித்தூர் ராணி பத்மினியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

அந்த படத்தில் ராணி பத்மினிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப்பாடல் இருப்பதாக கூறப்பட்டது. டைரக்டர் பஞ்சாலி இதை மறுத்தார். என்றாலும் பத்மாவதி படம் ராணி பத்மினி அவமரியாதை செய்யப்பட்டு இருப்பதாக ராஜபுத்திரர்கள் கருதுகிறார்கள்.


பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜபுத்திரசேனா, கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திட்டமிட்டப்படி பத்மாவதி படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே பத்மாவதி படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. என்றாலும் பத்மாவத் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று 11 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.

அந்த மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 25-ந் தேதி பத்மாவத் படத்தை வெளியிடலாம் என்று அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அந்த படம் முக்கிய நகரங்களில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் பத்மாவத் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை தீவைத்து எரிப்போம் என்று கர்னி சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி பத்மாவத் படத்துக்கு தடை விதிப்பதாக குஜராத், ராஜஸ்தான், அரியானா, மத்தியபிரதேச மாநில அரசுகள் அறிவித்தன.


இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். அந்த மனுவை விசாரித்த பிறகு பத்மாவத் படத்துக்கு 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளன.

தீர்ப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.

அப்போது நீதிபதிகள் பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பில் எந்தவித மாற்றத்தையும் செய்ய இயலாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பத்மாவத் படத்தை எதிர்த்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பத்மாவத் திரைப்படத்தை முடக்குவதற்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் மேற்கொண்ட கடைசி கட்ட முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் பத்மாவத் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பத்மாவத் படம் திரையிடப்பட்டால் வன்முறையில் ஈடுபடுவோம் என்று கர்னி சேனாவும், ராஜபுத்திரர் சேனாவும் எச்சரித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.


இதற்கிடையே உத்தரபிரதேச மாநில அரசு பத்மாவத் படத்துக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமின்றி பத்மாவத் படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கு உத்தரபிரதேச மாநில ராஜபுத்திர சேனா, கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் அலகாபாத், பக்பத், சுல்தான்பூர், கோரக்பூர் உள்பட பல நகரங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பத்மாவத் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள தியேட்டர்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். மத்திய அரசு அலுவலகங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

டெல்லி புறநகர் பகுதிகளில் ஒன்றான குக்கிராம் நகரில் சுமார் 50 பேர் கொண்ட கர்னி சேனா அமைப்பினர் கடைகள், மால்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். டெல்லி – குக்கிராம் இடையே போக்குவரத்தை மறித்து போராட்டம் செய்தனர்

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB