சான்றிதழ் – விமர்சனம்

கருவறை என்னும் கிராமத்தில் இருக்கும் மக்கள் மிகவும் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகிறார்கள். வெளியூர் ஆட்கள் அனுமதி இல்லாமல் அந்த ஊருக்குள் செல்லவும் முடியாது. உள்ளூர் ஆட்கள் அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியே செல்லவும் முடியாது. இப்படி ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுடன் வாழும் இந்த ஊருக்கு சிறந்த கிராமம் என்று பட்டம் வழங்க கவர்னர் முடிவு செய்கிறார். ஆனால், அந்த பட்டத்தை ஊர் மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இறுதியில் கருவறை கிராம மக்கள் பட்டத்தை வாங்க மறுக்க காரணம் என்ன? ஊர் மக்கள் கட்டுப்பாடுடன் வாழ காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிகுமார், இரண்டாம் பாதியில் தான் வருகிறார். இவரது நடிப்பு ரோபோ போல் இருக்கிறது. இவரது மனைவியாக வரும் ஆஷிகா கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். திருப்பம் தரும் இவரது காட்சி அதிகம் எடுபடவில்லை.   நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கும் இன்னும் அதிக காட்சிகள் கொடுத்து இருக்கலாம். முதல் பாதியில் ரோஷன் பசீர் நாயகனாக வலம் வந்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

ராதாரவி, ரவி மரியா, மனோபாலா, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மிகவும் மோசமான ஒரு கிராமம் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் மாறுகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயசந்திரன். நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. முதல் பாதி ஒருபடமும், இரண்டாம் பாதி ஒரு படமும் பார்த்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.   ரவிமாறன் சிவன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பைஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘சான்றிதழ்’ – திருத்தம் செய்திருக்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!