லவ் – விமர்சனம்

பரத்தும் வாணி போஜனும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர். பரத்திற்கு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தின் காரணமாக அவருக்கும் வாணி போஜனுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே தகராறு எல்லை மீறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் வாணி போஜன் உயிரிழக்கிறார். இந்நேரம் வாணி போஜனின் தந்தை வீட்டிற்கு வர, வாணி போஜனின் சடலத்தை மறைக்க முயற்சிக்கிறார் பரத். இறுதியில் வாணி போஜன் சடலத்தை பரத் எப்படி மறைத்தார்? இந்த பிரச்சினையில் இருந்து பரத் மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

தொழில் நஷ்டத்தால் வீட்டில் முடங்கி மனைவி வாணிபோஜனின் கோபத்துக்குள்ளாகி அவமானப்படும் கணவனாக படத்தில் வாழ்ந்துள்ளார் பரத். படத்தின் பாதி நேரம் பரத்துக்கு மது பாட்டில்களில் போகிறது. நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் கியூட் அழகுடனும், கணவனுடன் சண்டையிடும் காட்சியில் எதார்த்த நடிப்பையும் காட்டியுள்ளார் வாணி போஜன். நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியுள்ளனர். ஒரே சீனில் அதிரடியாக வந்து செல்கிறார் ராதா ரவி.  

திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் காதலித்து விட்டுக் கொடுத்து போனால் வாழ்க்கை சுகமானதாக இருக்கும். ஆனால் இதில் கணவன்-மனைவி இருவருக்கிடையே ஈகோவால் வீட்டில் பூதாகரமாக வெடிக்கும் பிரச்சினையை படமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஆர்.பி.பாலா.   கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினைகள் குடும்ப வாழ்க்கையை எவ்வளவு சீர்குலைக்கின்றது என்பதை இயக்குனர் ஆர்.பி.பாலா படமாக காட்டியுள்ளார்.

இருப்பினும் ஒரே வீட்டில் கதை நகர்வதால் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. அதோடு ஆங்காங்கே கதை தாவி செல்வதை தவிர்த்து இருக்கலாம். இசையமைப்பாளர் ரோனி ராப்சல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் லவ் – சுவாரஸ்யம் குறைவு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!