மது விற்பனையை குறைப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்- சரத்குமார்

தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுதல், கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கான ஆலோசனையை கண்டித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்

மனித மூளையை சலவை செய்து, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!