உடல் எடை குறைந்ததற்கு டயட் மட்டும் காரணமல்ல.. மனம் திறந்த ரோபோ சங்கர்

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிறைய காமெடி நிகழ்ச்சிகளை பார்த்தேன். எத்தனையோ மக்களை நான் சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் என் கஷ்டத்தை தீர்த்தது காமெடி நிகழ்ச்சிகள் தான். அதிலும் விஜய் டிவி ராமருடைய காமெடியை அசைக்கவே முடியாது. எனது உடல் நிலை குறித்து யூ டியூபில் வந்த வதந்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வந்தது” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!