கனெக்ட் – விமர்சனம்

சூசன் (நயன்தாரா) தனது டாக்டர் கணவர் ஜோசப் (வினய்), மகள் அன்னா (ஹனியா நஃபீசா) மற்றும் அப்பா ஆர்தர் (சத்யராஜ்) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்போது புதிய வகை வைரசான கொரோனா தொற்று ஊருக்குள் பரவுகிறது. இந்த நோயால் உயிரிழப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த வைரசினால் மருத்துவமனையில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஜோசப் நோய் தாக்கி இறந்து போகிறார்.  

சூசனும் அவரது மகள் அன்னாவுக்கும் கொரோனா வைரஸ் பரவ இருவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனிடையே அன்னா தனது இறந்த அப்பாவிடம் பேசுவதற்காக ஆன்லைனில் ஒரு மந்திரவாதியின் மூலம் பேச முயற்சி செய்கிறாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தவறான ஆவியை அன்னா மீது அந்த மந்திரவாதி ஏவி விடுகிறான். இதில் சிக்கிக் கொள்ளும் தன் குழந்தையை மீட்டெடுக்க சூசன் முயற்சி செய்கிறார். இதற்கான காரணம் புரியாமல் தவிக்கும் சூசன் இறுதியில் இந்தக் காரணத்தை கண்டுபிடித்தாரா? தனது மகளை இதிலிருந்து மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியான நயன்தாரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவரை இழந்த துக்கம், மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை, பயம், கோபம் என எல்லாம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி கைத்தட்டல்கள் பெறுகிறார். வீட்டில் நடக்கும் கதை என்றாலும் அதில் பல வித்யாசங்களை வெளிப்படுத்தியுள்ளார். கமர்ஷியல் படங்களில் தோன்றும் நயன்தாரா போல் இல்லாமல் எதார்த்தமாக இருப்பது சிறப்பு. அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

மகளுக்காக ஏங்கும் காட்சிகளிலும் பேத்திக்காக துடியாய் துடிக்கும் காட்சிகளிலும் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார். மகளாக வரும் ஹனியா நஃபீசா கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு. சிறிது நேரம் படத்தில் தோன்றினாலும் வினய்யின் நடிப்பு கவனிக்கத்தக்கது. பாதிரியாராக வரும் அனுபம் கேர், தோழியாக வரும் லிஸி, மீடியமாக வரும் மேகா ராஜன், தெரபிஸ்ட்டாக வரும் பிரவீனா நண்டு உள்ளிட்ட பலரின் நடிப்பு பாராட்டுக்குறியது. ஊரடங்கு சமயத்தில் வீட்டில் சிக்கி தவித்த மக்களின் நிலையை கற்பனையோடு திகில் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

வீட்டிலே நடக்கும் கதை என்பதால் படத்தின் விறுவிறுப்பு எப்படி இருக்கும் என்ற அச்சத்தை தனது திரைக்கதையின் மூலம் சிறப்பாக கையாண்டு கனவம் ஈர்க்கிறார். பெரும்பாலான காட்சிகள் தொலைப்பேசியின் உரையாடல் என்றாலும் அதனை அற்புதமாய் திரைக்கதையின் மூலம் சமன் செய்துள்ளார். இயக்குனர் நினைத்த விஷயங்களை பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. தொலைப்பேசி உரையாடல்களை கச்சிதமாக காட்சிபடுத்தியுள்ளார். திகில் படத்திற்கு உரித்தான பின்னணி இசையை திகிலோடு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர். மொத்தத்தில் கனெக்ட் – கச்சிதம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!