அன்பு பேர சொன்னாலே பீதியில் நடிகைகள்..!! ஏன் தெரியுமா..?


தமிழ் சினிமா திரையில் எத்தனையோ வில்லன்களை சந்தித்திருக்கிறது எல்லாரையும் வென்றிருக்கிறது. ஆனால் நிஜத்தில் தமிழ் சினிமாவை ‘வெச்சு செய்யும் வில்லன்’ என்றால் அது அன்பு என்றழைக்கப்படும் அன்புச்செழியன் தான். இந்த மதுர மச்சானின் பெயரைச் சொன்னால் கோலிவுட்டில் நேற்று பிறந்த தயாரிப்பாளரின் குழந்தை கூட ஒரு கையால் தன் வாயையும், அடுத்த கையால் தன் அப்பா வாயையும் சேர்த்து மூடும். அந்தளவுக்கு பயம்!

அன்புச்செழியனிடம் கடன் வாங்கிவிட்டு வட்டிக்கு மேல் வட்டி கட்டி ஒரு கட்டத்தில் தன் உயிரையும் கட்டிவிட்டு தூக்கில் தொங்கும் சினிமா புள்ளிகளின் வரிசையில் நேற்று இணைந்திருக்கிறார் சசிக்குமாரின் அத்தை மகன் அசோக்குமார். இந்த அசோக்காவது வெளியில் தெரியாத கேரக்டர். ஆனால் இந்திய சினிமாவால் போற்றப்படும் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வி. எனும் ஜி.வெங்கடேஸ்வரனை அகால மரணமடைய வைத்தவர் இந்த அன்புதான்.
சரி யார் இந்த அன்பு?


மதுரையில் சாதாரண ஃபைனான்ஸியராக இருந்தவர்தான் 1990களின் இறுதியில் சினிமா ஃபைனான்ஸியராக அவதாரமெடுத்தார். டப்பாவில் குவிந்து கிடந்த பணத்தை அள்ளியள்ளி சினிமாக்காரர்களுக்கு வழங்கி அவர்கள் தரும் வட்டியை சாக்குப் பைகளில் நிரப்புவார். கொடுத்த கடனை சரியாக திருப்பி தராவிட்டால் அன்பு அதை ட்ரீட் செய்யும் விதமே வேறு லெவலில் இருக்கும்.

அன்புவின் கடன் வலையில் விழுந்து நொந்தது கோலிவுட் ஆண்கள் மட்டுமில்லை. பெண்களும்தான். தேவயானி, ரம்பா ஆகியோர் அன்புவிடம் சிக்கி மீண்டது ஏதோ ஒரு பிறவியில் அவர்கள் செய்திருந்த புண்ணியம். அவர்கள் பட்ட அவஸ்தையை வெளியே சொல்ல முடியாத ரகங்கள் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். வட்டியும், அசலும் கட்ட முடியாதவர்களின் சொத்துக்களை முதலில் தூக்குவார் பிறகு ஆளையே தூக்கிடுவார். திரையில் நூறு பேரை ஒரே அடியில் அடித்து நுங்கெடுக்கும் ஹீரோக்கள் தங்களின் சொந்த தயாரிப்புக்காக அன்புவிடம் கடன் வாங்கிவிட்டு பின் அவர் வீட்டு வராந்தாவில் அல்லக்கைகள் போல் நிற்பதெல்லாம் வழக்கமான கூத்துதான்.

கோபுரம் ஃபிலிம்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னை தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இரு பெரும் திராவிட கழகங்களின் மிக முக்கிய அதிகார மையங்களயும் தன் பாக்கெட்டில் வைத்திருந்தார் அன்பு. தி.மு.க.வை பொறுத்தவரையில் மதுரை அண்ணனையும், அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் சின்ன மேடத்தையும் அன்புக்கு மிக நெருக்கம் என்பார்கள். இந்த பயமே போலீஸையும், பிற துறையினரையும் அன்புவிடம் இருந்து விலகி நிற்க வைத்தது.


அன்பு மேல் சில சினிமாக்காரர்களால் அவ்வப்போது ‘அநியாய வட்டி, ஆளைதூக்குவேன்னு மிரட்டுகிறார்.’ எனும் புகார்கள் கொடுக்கப்படும். ஆனால் அவை வெளியவே தெரியாமல் அமுக்கப்படும். சில நேரங்களில் கண் துடைப்புக்காக சில ரெய்டுகள் நடத்தப்படும் பின் அவை அப்படியே கடந்து போய்விடும்.

ஜி.வி.யின் சாவுக்கு காரணம் அன்புதான் என்பது வெளிப்படையாக பேசப்பட்டாலும் கூட அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் சுந்தராடிராவல்ஸ் படத்தை தயாரித்த யுவஸ்ரீ கிரியேஷன்ஸின் உரிமையாளர் தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் சில வருடங்களுக்கு முன் அன்பு கைதானார். பின் எளிதாய் வெளியே வந்தார்.

அதன் பிறகும் பட தயாரிப்பு, விநியோகம் என்று இறங்கினார். நடிகர் திலகத்தின் பேரன் விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்கார துரை படம் கூட அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் தயாரித்ததுதான். ஒரு மோசமான தயாரிப்பாளர் என்று தெரிந்தும் கூட நடிகர் பிரபு தன் மகனை அன்புவின் தயாரிப்பில் நடிக்க வைக்க தயங்கவில்லை என்றால் அந்த துறையில் அன்புவின் ஆளுமையை புரிந்து கொள்ளுங்கள். பிரபு மட்டுமல்ல இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன.


தனது சகோதரர் இறந்ததற்கு எந்த பழிவாங்கலும் இல்லாமல் வழக்கம்போல் அதிக இருட்டும், கொஞ்சம் வெளிச்சமும் கலந்த தன் இயல்பு வாழ்க்கைக்குள் ஐக்கியமானார் மணிரத்னம். இப்போது சசி தனது உறவின் உயிரை அன்புவிடம் இழந்திருக்கிறார். ’மதுரக்காரண்டியேய்’ என்று சவடால் சவுண்டு விடும் சசியாவது நிஜத்தில் அன்புச்செழியனின் ஆட்டத்தை அடக்குவாரா? அல்லது ரெண்டு நாள் அழுதுவிட்டு மீண்டும் தலையாட்டியபடி நடிக்க வந்துவிடுவாரா?
பார்ப்போம்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#