ஓ.டி.டி.யில் ‘2018’ படத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு.. தியேட்டர்களை மூடி போராட்டம்

ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவான ‘2018’ மலையாள திரைப்படம், கடந்த மே 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது

இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் சுமார் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம், மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படம் தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ‘2018’ திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதைக் கண்டித்து கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்படி ‘ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் யுனைடெட் ஆர்கனைசேஷன் ஆஃப் கேரளா’ (FEUOK) உடன் இணைந்து கேரளாவில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களில் ஜூன் 7, 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து திரைப்பட காட்சிகளையும் ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!